சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் மீது கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை : சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் மீது கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் எஸ்.பி. கிரண்ஸ்ருதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனத்தினர் கூறுகையில், ‘அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டை நிலையத்தில் ஏற்கனவே இருந்த காவல் நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. மீண்டும் காவல் நிலையம் அமைத்து இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். அதேபோல் பெல் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. தெரிவித்தார்.

தொடர்ந்து நிறுவனத்தினர் கூறியதாவது: ராணிடெக் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 92 தோல் தொழில் நிறுவனங்களிலிருந்து கழிவுநீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு சுத்திகரித்து ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறையை பின்பற்றி நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் சில என்.ஜி.ஓ அமைப்பினர் தோல் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது என தவறான தகவல்களை பரப்பி பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கழிவுநீர் குழாய்கள் மீது வீடுகள் கட்டியுள்ளனர். கழிவுநீர் குழாயில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் விபத்துகள் ஏற்படும். ஆகவே இந்த குழாய்களுக்கு மேல் ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பதை அகற்றினால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள மதுபானக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள வேகன்ட் நிலத்திற்கு டி.டி.சி.பி ஒப்புதல் வரி நிலுவை ₹94 லட்சம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டவேண்டி இருந்தது. இதனால் எங்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் தனி கவனம் செலுத்தி, சிட்கோ மேலாண்மை இயக்குனரிடம் தெரிவித்து அதற்கான வரிபாக்கியை சிட்கோ நிறுவனமே செலுத்தியமைக்கு நன்றி என அரக்கோணம் சிட்கோ தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய கலெக்டர் வளர்மதி, உங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து சுகாதாரம், சமூக நலத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி தேவைப்படுகிறது. எனவே தொழில் நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க வேண்டுமென கலெக்டர் கோரிக்கை விடுத்தார்.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு