300 ச.மீட்டருக்குள் வீடு, கடை சேர்த்து கட்டினால் மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று தேவை இல்லை: அதிகாரிகள் தகவல்

சென்னை: வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தால் மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது.

இந்த கட்டிடம் கட்டிய பிறகே, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்று பெற்று சமர்ப்பித்தால்தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். ஆனால், இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. எனவே தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்தது.

இந்த திருத்தங்களை கடைப்பிடிக்குமாறு அனைத்து கள அதிகாரிகளுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், பல இடங்களில் ஒரே கட்டிடத்தில் தரைத்தளத்தில் கடை, மேல்தளத்தில் வீடு கட்டும்போது, கட்டிட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டருக்கு உட்பட்ட கட்டிடத்தில், வீடு மற்றும் வணிக நிறுவனம் இணைந்து இருந்தாலும், புதிய மின் இணைப்பு வழங்க கட்டிட பணி நிறைவு சான்று இனி கேட்கக்கூடாது என்று பணியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்