வீடு கட்டுவதற்கு ₹9 லட்சம் வாங்கி விட்டு இழுத்தடிப்பு பாஜக பிரமுகர்களை கண்டித்து தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

*தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், பாஜ பிரமுகர்களை கண்டித்து கூலித் தொழிலாளி குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளையை சேர்ந்தவர் செல்வம் (45). மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்களுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு திடீரென தான் மறைத்து வைத்திருந்த இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து அவர் மீதும் குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பிற்கு நின்ற இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், பரமேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் மீது ஊற்றினர்.

பின்னர் போலீசார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீடு இடிந்து விட்டதால், அதனை கட்டுவதற்கு அப்பகுதியை சேர்ந்த 2 பேரிடம் பல்வேறு கட்டங்களில் ₹9 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் வீட்டை கட்டி முடிக்காமல் உள்ளனர். இதுவரை ₹5 லட்சம் மதிப்பிலான பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, முறையாக பதில் சொல்லாமல் இருந்தனர்.

மீதி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோதும், மறுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர்.

இதனால் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு உரிய பணத்தை பெற்றுத்தருமாறும் போலீசாரிடம் செல்வன் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்