ஓட்டல், இனிப்பகங்களில் உணவு பொருட்களில் தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிட வேண்டும்

 

பட்டுக்கோட்டை, நவ.4: இனிப்பு பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை அவசியம் குறிப்பிட வேண்டும் என்று ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சித்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அதற்காக தயாராகி வரும் இனிப்புகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரமானதாகவும் உள்ளதா? என்றும், மேலும் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகள் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உணவு மற்றும் இனிப்பக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை விளக்கிக் கூறினர். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா நிருபர்களிடம் கூறுகையில்,

ஒவ்வொரு இனிப்புப் பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை அவசியம் குறிப்பிட வேண்டும். இந்த நடைமுறையை அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன்,செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை