ஓட்டலில் குடிபோதையில் ரகளை எஸ்.ஐ., ஏட்டு சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் நடவடிக்கை

சேலம்: சேலத்தில் ஓட்டலில் ஊழியர்களிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட எஸ்ஐ, ஏட்டு ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சரக டிஐஜி, மாவட்ட எஸ்பி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானாவில் உள்ள ஓட்டலுக்கு கடந்த 19ம் தேதி குடிபோதையில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். ஒருவர் மேசை மீது தலை வைத்து போதையில் மயங்கி விட்டார். மற்றொருவர், வெளியில் நின்ற காரில் தூங்கிவிட்டார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. 2 மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்தவரிடம் புறப்பட்டுச் செல்லுங்கள் என உரிமையாளர் கூறியுள்ளார். அப்போது காரில் இருந்தவரும் இறங்கி வந்து, உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர். தகவலறிந்து அம்மாபேட்டை போலீசார் வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் எஸ்ஐ சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் எனத்தெரியவந்தது. அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த ரகளையை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட அது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலானது. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட எஸ்ஐ சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர். கூடுதல் எஸ்பி செல்லப்பாண்டியன் விசாரணை நடத்தி அறிக்கையை நேற்று, மாவட்ட எஸ்பி சிவக்குமாரிடம் வழங்கினார். அவர் சரக டிஐஜி ராஜேஸ்வரிக்கு அனுப்பினார். இதையடுத்து எஸ்ஐ சிவசக்தியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ராஜேஸ்வரியும், ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிவக்குமாரும் உத்தரவிட்டனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு