ஓட்டல் சர்ச்சையால் நன்கொடை பெற முடியாதே என்ற கவலையில் இருக்கும் பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘போலி ரசீது மூலம் பல லட்சம் நன்கொடை வசூலித்து சுருட்டியதா புகாரில் சிக்கியவர் தாமரை கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக தனி ஆவர்த்தனம் காட்டுறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘தாமரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைமை உத்தரவிட்டிருக்கு.. கட்சியில் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்ததால், சர்ச்சை ‘மன்னரின்’ தலைமையில் 6 பேர் குழு அமைத்து மாநிலம் முழுக்க நிர்வாகிகளை ஒதுக்கி, உறுப்பினர் சேர்க்கை வேலை நடந்து வருது.. ஆனாலும், நத்தை வேகத்தில்தான் பணிகள் நடக்கிறதாம்.. தூங்கா நகர் மாவட்டத்தில் இன்னும் இதன் வேகம் மந்தமாக தூக்க நிலையிலேயே இருக்கிறதாம்.. இதற்கென 2 பேர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மாவட்ட முக்கிய நிர்வாகியானவர், தனி ஆவர்த்தனத்தில் ஆட்களை திரட்டி தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென போராடுகிறாராம்.. ஆனாலும் யாரும் உறுப்பினராக சேர்வதில் போதிய ஆர்வம் காட்டவில்லையாம்.. காரணம், என்ன தெரியுமா? இவர் மீது போலி ரசீது மூலம் பல லட்சம் நன்கொடை வசூலித்த புகார் தொடர்பாக, மாநில பொருளாளர் விளக்க நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம்.. இதற்கு உரிய விளக்கம் தராமல் எஸ்கேப் ஆகும் இவர், இனி தனக்கு பதவி கிடைக்காது என்ற நிலையில்தான், இப்படி இந்த உறுப்பினர் சேர்க்கையை கையிலெடுத்துள்ளார் என அக்கட்சியின் நிர்வாகிகளே சொல்றாங்க… ஏற்கனவே, ரெண்டு பேரை நியமிச்சும் போதிய ஆதரவில்லையாம்.. இதுல இவரை நம்பி யார் கட்சியில சேருவார்னு புலம்பல் சத்தம் அக்கட்சிக்குள்ளேயே அதிகரித்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏட்டிக்கு போட்டியா, முட்டல் மோதல்னு அரசியல் செய்துக்கிட்டு இருந்த ‘முன்னாள்கள்’ மத்தியில் திடீர் மாற்றம் ரத்தத்தின் ரத்தங்களுக்கே வியப்ப ஏற்படுத்தியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் ஏதாவது நிகழ்ச்சி நாளே முட்டல் மோதல் இல்லாம இருக்காது. ஆனா, இந்த தடவை அண்ணா பிறந்த நாளையொட்டி முட்டல், மோதல்னு எந்த சலசலப்பும் இல்லாமலே சிலைக்கு மாலை அணிவிப்பு நடந்து முடிஞ்சிருக்காம்.. எல்லாவற்றிலும் கோஷ்டி அரசியல் நடத்தி வந்த ‘முன்னாள்கள்’ இந்த தடவை சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்வம் காட்டவில்லையாம்.. அதோடு சிலை இருக்கும் பகுதிக்கே செல்லாமல் தங்கள் பகுதியில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்வை சத்தமே இல்லாம நடத்தி முடிச்சிட்டாங்களாம்… ஏட்டிக்கு போட்டியாக அரசியல் செய்து வந்தவர்களிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்னு ரத்தத்தின் ரத்தங்களே வியப்பில் இருக்கும் அளவுக்கு மாறிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை ஓட்டல் சர்ச்சை விவகாரத்தில் மலையானவர் காலை வாரிட்டதா நினைத்து ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராமே பெண் எம்எல்ஏ தரப்பு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாவட்டத்தில் தாமரை கட்சியை பொறுத்தவரை 3 கோஷ்டிகள் செயல்படுறாங்களாம்… இதில், முன்னாள் பெண் கவர்னர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் தற்போது ‘சைலண்ட் மோடுல’ உள்ளனராம்.. காரணம், அம்மணிக்கு மீண்டும் ஏதாவது ஒரு முக்கிய பதவி கிடைக்கட்டும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்னு ஒதுங்கி காத்திருக்காங்களாம்.. ஆனால், ‘மலை கோஷ்டி‘யை சேர்ந்தவர்களும், பெண் எம்எல்ஏ கோஷ்டியை சேர்ந்தவர்களும் அடிக்கடி முட்டிக்கொள்கின்றனராம்.. இவர்களில், யார் பெரியவர் என்ற ஈகோ ரொம்ப நாளா ஓடுது.. இதன் காரணமா முட்டல், மோதல் நீடிக்கிறதாம்.. சமீபத்தில், நிர்மலா சீதாராமன் சர்ச்சை விவகாரத்தில், ‘மலை’யான நபர், தொப்..பென கீழே விழுந்து, மன்னிப்பு கோரியது, பெண் எம்எல்ஏ தரப்புக்கு சுத்தமா பிடிக்கவில்லையாம்.. கோவை மாவட்டத்தில் கட்சி வளர்ப்பில் நாம்தான் முன்னணியில் உள்ளோம். ஆனால், இந்த ஆளு காலை வாரி விட்டுப்புட்டாரே, இனி கோவை மாவட்டத்தில் ஒரு தொழிலதிபரும் நம்மை மதிக்க மாட்டாங்களே, தேர்தல் நேரத்தில் நன்கொடை பெற முடியாதேனு ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம்.. வெளிநாட்டில் இருந்தாலும், இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து, கோவை மாவட்ட தொழிலதிபர்கள் மத்தியில் ‘மலை’ பெயர் வாங்கிட்டு போயிட்டாரே என்ற வருத்தத்தில் பெண் எம்எல்ஏ தரப்பு ஒரே புலம்பலாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எலியும் பூனையுமா இருந்த மாஜிக்கள் திடீரென அருகருகே அமர்ந்து கொண்டது இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துட்டாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் தலைமையில் மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்துச்சாம்.. அப்போது மணியானவர், தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துகாரர் அணியில் சேர்ந்த மாஜியை தனது இருக்கையின் அருகில் அமர வைத்துக்கொண்டாராம்… இதை பார்த்த நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துட்டாங்களாம்.. ஒரு காலத்தில் இரண்டு பேரும் எலியும், பூனையுமாக இருந்தாங்க.. இன்று ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து இருக்காங்களே.. இது எல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தான்.. பின்னர் சீட் கேட்கும் போது அவர்களுக்குள் போட்டிப்போட்டு கொண்டு தலைமையிடத்திற்கு சென்று வாங்கி வருவாங்க.. பொது இடங்களில் கோஷ்டி பூசல், பனிப்போரை காட்டிக் கொள்ளாமல் மாஜி அமைச்சர் மணியானவர் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார்னு கட்சிக்குள்ளேயே அரசல் புரசலாக பேசிக்கிட்டாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு