ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை ஷூவால் அடிக்க பாய்ந்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட காவல் துறையில், எஸ்எஸ்ஐஆக பணியாற்றி வருபவர் காவேரி(56). இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, கடந்த 6 மாதங்களாக அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக்காவல் பிரிவில் பணியமர்த்தப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ காவேரி, தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார்.

கடந்த 2ம் தேதி, அந்த ஓட்டலில் சாப்பிட்ட காவேரி, பணம் கொடுக்கவில்லை. அடுத்த நாள் சாப்பிட வரும் போது தருவதாக கூறி சென்றுவிட்டார். மறுநாள் (3ம் தேதி) மாலை ஓட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ், 2 நாள் சாப்பிட்ட உணவுக்கும் சேர்த்து, எஸ்எஸ்ஐ காவேரியிடம் பணம் கேட்டு உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, பணத்தை தூக்கி வீசியதுடன், காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி முத்தமிழை அடிக்க முயன்றார்.

இதை ஓட்டலில் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் தடுத்து, எஸ்எஸ்ஐ காவேரியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைத்தும் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், கடை உரிமையாளர் முத்தமிழ், எஸ்எஸ்ஐ காவேரி ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, எஸ்பி மகேஸ்வரன், எஸ்எஸ்ஐ காவேரியை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்