சூடான தேர்தல் களம்

இ ந்தியாவின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடப்படும் பெருமைக்குரியது மக்களவை தேர்தல். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, 1949ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, குடியரசு நாடாக இந்தியா தன்னை அறிவித்தது. அப்போது சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூகம் உள்ளிட்ட எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல், 21 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற அறிவிப்பை, தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதே ஆண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக சுகுமார்சென் நியமிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை விளக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 1951ம் ஆண்டு அக்டோபர் முதல், 1952ம் ஆண்டு பிப்ரவரி வரை பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டது. முதல் பொதுத்தேர்தலுக்கு பிறகு 1952ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி முதல் மக்களவை உருவாக்கப்பட்டது.

முதல் தேர்தலில் 17.32 கோடி மக்கள் வாக்களித்தனர். 14 தேசியக்கட்சிகள் உள்பட 53 கட்சிகள் போட்டியிட்டன. 44.87 சதவீத மக்கள் வாக்களித்தனர். இந்த வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவாக உருவெடுத்தது மக்களவை தேர்தல். இதன்படி 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை, 7கட்டமாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என்று நாடு முழுவதும் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் முதற்கட்டமாக தேர்தலை சந்திக்கும் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு ஆண்கள் 3.03 கோடி, பெண்கள் 3.14 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,200 பேர் என்று மொத்தம் 6.18 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் தேர்தல்களமும் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜ கூட்டணி என்று பிரதான கட்சிகளின் கூட்டணிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இந்தவகையில் 99 சதவீத வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்திற்கான தொடக்கப்புள்ளியை வைத்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் மக்கள் வெள்ளத்தில் தொடங்கிய தேர்தல் பிரசாரம் ஒட்டு மொத்த தேர்தல் களத்தின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அவர் தனது சூறாவளி பிரசாரத்தை நிகழ்த்துகிறார். அவரை தொடர்ந்து இதர கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம், பிரசார பயண பட்டியலை வெளியிட்டுள்ளனர். கோடை தொடங்கும் நேரத்தில் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. இதனை செவிமடுத்து கேட்கின்றனர் மக்கள். சீர் தூக்கிப்பார்த்து முடிவெடுக்க, ஏப்ரல் 19ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் தமிழ்மண்ணின் வாக்காள பெருமக்கள்.

Related posts

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை