கடும் வெயில் தாக்கம் எதிரொலி திற்பரப்பு அருவியில் குறைவாக விழும் தண்ணீர்

*நீச்சல் குளத்தில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

குலசேகரம் : கடும் வெயில் தாக்கத்தால் திற்பரப்பு அருவியில் குறைவாக தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் சிறுவர் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில் மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களை தேடி சென்று வருகின்றனர். அதிலும் குலசேகரத்தை ஒட்டியுள்ள திற்பரப்பு அருவியை தேடி செல்வது வாடிக்கையான ஒன்று.

கடும் வெயிலால் மலைகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் வறண்டுவிட்டன. அணைகளில் இருந்தும் போதிய அளவில் தண்ணீர் திறப்பு இல்லை. இதன் காரணமாக கோதையாறு தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.கோதையாற்றில் தண்ணீர் குறைந்துவிட்டதால், திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் குறைந்து நீரோடை போல் கொட்டுகிறது. கோடை வெயிலை சமாளிக்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடந்த சில நாட்களாகவே திற்பரப்பு அருவிக்கு வந்து உற்சாக குளியல்போட்டு செல்கின்றனர்.

ஆனால் தண்ணீர் குறைந்த அளவிலேயே விழுவதால் பாறையோடு ஒட்டிக்கொண்டு குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர்.நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. ஆனால் அங்கும் தண்ணீர் குறைந்து எங்கு பார்த்தாலும் பாறையாகவே காட்சியளிக்கிறது.

தடுப்பணையின் களியல் பகுதியில் வில்லுக்குறி கூட்டு குடிநீர் திட்டமும், மற்றொரு பகுதியில் அழகிய பாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. தற்போது கடும் கோடை என்பதால் குடிநீர் தேவைக்காக கோதையாற்றில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுகிறது.இதனால் தடுப்பணையை கடந்து செல்லும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது.

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்