மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவு துணை இயக்குனர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்க துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, இந்த வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றார்.
இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த பிறகு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால், சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பிறகு அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு இதுவே சான்றாகும். ஏற்கனவே, செந்தில்பாலாஜியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தார்.

அதில், இன்று (நேற்று) முதல் 23ம் தேதி மாலை 3 மணி வரை காவலில் வைத்து விசாரித்துவிட்டு, அன்றைய தினம் மீண்டும் காணொலி மூலம் ஆஜர்படுத்த வேண்டும். மருத்துவமனையிலே அவரிடம் விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் சிகிச்சையை தொடர்ந்து காவேரி மருத்துவமனை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதியின் உத்தரவை வீடியோ கான்பரன்சில் கேட்ட செந்தில் பாலாஜி தனது உடல்நிலை சரியில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் நீதிமன்ற காவலில் அனுப்பக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்துள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கும் என்று வாதிட்டனர்.
அதற்கு நீதிபதி, அதற்காகத்தான் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருக்கிறேன். உத்தரவுகளை முழுமையாக படித்துவிட்டு உரிய நிவாரணத்தை தேடுங்கள். அமலாக்கத்துறை விசாரணையில் அசவுகரியும் ஏதும் ஏற்பட்டால் செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* அமலாக்கத்துறைக்கு 8 நிபந்தனைகள்
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் வருமாறு:
* அமலாக்கத் துறை துணை இயக்குநர் காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியேற்றக் கூடாது.
* செந்தில் பாலாஜியின் உடல் நிலை அவரது மருத்துவ சிகிச்சையை கருத்தில் கொண்டு அந்த மருத்துவமனையின் மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்.
* செந்தில் பாலாஜிக்கு தரப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலைக்கு எந்த தொந்தரவும் மற்றும் இடையூறுகளும் தரக்கூடாது.
* செந்தில் பாலாஜிக்கு விசாரணையின் போது தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தருவதுடன் மூன்றாம் தரமான விசாரணையை மேற்கொண்டு அவருக்கு தொந்தரவு தரக்கூடாது.
* எந்த சூழ்நிலையிலும் அவரை மிரட்டவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது.
* மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் அவரது குடும்ப உறுப்பினர்களை அமலாக்கத் துறை விசாரணையின் போது பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
* விசாரணையின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* அவரை வரும் 23ம் தேதி மதியம் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த வேண்டும்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை