பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் குதிரைகள்

*தீவிர பயிற்சியில் இளைஞர்கள்

ஆத்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆத்தூரில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்காக, குதிரைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து இளைஞர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ரேக்ளா பந்தயத்தில் திருச்சி, துறையூர், மதுரை, கரூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான குதிரைகள் கலந்து கொள்வது வழக்கம். அதே போல், சேலம் மாவட்டம் மற்றும் உள்ளூரில் உள்ள குதிரைகளும் கலந்து கொள்ளும். ஆத்தூர் பகுதியில் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் பலர், தங்களது குதிரைகளை தயார்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், ‘ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் வேகமாக ஓடுவதற்காக தயார்படுத்தும் பணியில் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக குதிரைகளுக்கு நீச்சல் பயிற்சி, ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். அதேபோல், பல்வேறு சத்தான உணவு பொருட்களை கொடுத்து, வெற்றி பெறுவதற்காக குதிரைகளை தயார்படுத்துகிறோம். தினசரி ஆத்தூர் பகுதியில் உள்ள தடுப்பணைகளிலும், ஏரிகளிலும் 3 மணி நேரத்துக்கு மேலாக குதிரைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதற்காகவும், கால்கள் அதிவேகமாக இயங்கக்கூடிய வகையிலும், இந்த நீச்சல் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்,’ என்றனர்.

Related posts

நாகல்கேணி பகுதியில் கஞ்சா விற்ற தம்பதி கைது

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை