நம்பிக்கை காத்திருப்பு

தமிழ்நாட்டின் உணவுக்களஞ்சியமாக திகழ்வது டெல்டா மாவட்டங்கள். இந்த டெல்டா மாவட்டங்களின் பயிர் சாகுபடிக்கு ஆதாரமாக இருப்பது காவிரிநீர். நடந்தாய் வாழி காவேரி என்று தமிழ்முனி அகத்தியர் போற்றிப்பாடிய காவிரியின் மொத்த பரப்பளவு 81,155 சதுரகிலோ மீட்டர். இதில் 34,273 சதுரகிலோ மீட்டர் பரப்பில் கர்நாடகத்திலும் 43,856 சதுரகிலோ மீட்டர் பரப்பில் தமிழ்நாட்டிலும் பாய்ந்தோடுகிறது காவிரி. இந்தவகையில் கர்நாடகத்தை விட, தமிழ்நாட்டையே பெருமளவில் வியாபித்துள்ளது காவிரி. ஆனால் கர்நாடகத்தின் குடகுமலையில் ஊற்றெடுக்கிறது என்ற ஒற்றைக்காரணத்தால் காவிரியை சொந்தம் கொண்டாடியது கர்நாடகம்.

இதையே காரணமாக வைத்து தமிழ்நாட்டின் ெடல்டா பாசனத்திற்கு தேவையான நீரை உரியநேரத்தில் திறந்து விடாமல் முரண்டு பிடித்தது. ஆனால் ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு, பல்லாண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு காவிரியில் தனக்கான உரிமையை நிலைநாட்டியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நீரை மாதம் தோறும் முறையாக வழங்க வேண்டும். ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி, நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி, டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே மாதம்வரை 2.50 டிஎம்சி என்று இந்த நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதனை முறையாக கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இதை முறையாக பின்பற்றாத கர்நாடகம், பெருமழைக்காலங்களில் அங்குள்ள அணைகள் நிரம்பி வழியும் போது நீரை திறந்துவிடுகிறது. இப்படி மழைநீர்வடிகாலாக மட்டுமே தமிழ்நிலத்தை பயன்படுத்தும் கர்நாடகம், அதையே ஆணையத்திற்கும் கணக்கு காட்டி, உரிய நீரை வழங்கி விட்டதாக பசப்புகிறது. இயற்கை அன்னை அருட்கொடையாய் நீரை வார்க்கும் காலங்களில் இங்குள்ள விவசாயிகளுக்கு கவலை இல்லை. ஆனால் பருவமழை பொய்க்கும் காலங்களில் உரியநேரத்தில் கர்நாடகம் நீரை வழங்காவிட்டால் லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி வீணாகிறது.

நடப்பாண்டில் இதுபோன்றதொரு இக்கட்டான நிலை, இப்போது டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் டெல்லியில் நடந்த கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் தலைவர், ‘மிகவும் அவசரமாக தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு பத்தாயிரம் கனஅடி தண்ணீரை கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதையும் அலட்சியப்படுத்தியுள்ளது கர்நாடகம். அம்மாநில முதல்வர் சித்தராமையா இப்போதைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்.

இதனால் கருகும் பயிர்களை காப்பதற்காக மீண்டும் சட்டத்தின் கதவுகளை தட்ட முடிவு செய்திருக்கிறது தமிழ்நாடு. நாளை (14ம் தேதி) காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு. சட்டம் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும். இந்த தீர்ப்பானது கருணை மறந்த கர்நாடகத்திற்கு குட்டு வைத்து டெல்டாவில் கருகும் பயிர்களை காப்பதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் தமிழ் நிலத்தின் விவசாயிகள்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்