Sunday, September 8, 2024
Home » “தேனீ மட்டுமல்ல, நானும் சுறுசுறுப்புதான்” பெண் தொழில் முனைவோர் சரஸ்வதி!

“தேனீ மட்டுமல்ல, நானும் சுறுசுறுப்புதான்” பெண் தொழில் முனைவோர் சரஸ்வதி!

by Porselvi

உலகம் முழுவதும் இப்பொழுது தேனீ வளர்ப்புத் தொழில் என்பது லாபம் சம்பாதிக்கின்ற தொழில்களில் ஒன்றாக மிகப் பிரபலமாகி வருகிறது. பொதுவாக தேனீக்கள் இயற்கையாக மரம், உயர்ந்த கட்டிடம், மலைகள் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய அளவில் தேன்கூடுகளை கட்டி தேன் சேகரிக்கப்பட்டு வந்தது. இப்போது பலர் தேனீ உற்பத்தி தொழிலுக்காக அவைகளைப் பண்ணைகளில் வைத்து பராமரித்து அந்தத் தேனை விற்பனைசெய்து வருகின்றனர். தேனீ பண்ணை வளர்ப்பு முறையில் குறைந்த அளவிலான முதலீடும், குறைந்த ஆட்களும் மட்டுமே போதும் என்ற காரணங்களால்இந்த தொழிலை நடத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தின் உள்ள முனீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி. பண்ணைமுறையில் தேனீக்களை வளர்த்து வெற்றிகரமாக தேன் விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவோர்தான் சரஸ்வதி. இவரது இயற்கையான பண்ணைத் தேனுக்கு சுற்றுவட்டாரத்தில் மட்டுமல்ல பல ஊர்களிலும் கஸ்டமர்கள் ஏராளம்.

தேனீ வளர்ப்பு குறித்து எப்படி அறிந்து கொண்டீர்கள்?

முதலில் இணையதளத்தில் தேனீக்கள் குறித்து அறிந்து கொண்ட போது இயல்பாகவே ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் கோயமுத்தூர் அக்ரிகல்சர் யூனிவர்சிட்டி நடத்திய வேளாண்மை தொழில் பயிற்சி முகாமில் தேனீ வளர்ப்பு குறித்து முறையான பயிற்சி மேற்கொண்டேன். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து சொந்தமாக தேனீப் பெட்டிகளை வாங்கி தோட்டத்தில் வைத்து தேனீக்களை வளர்த்து தேன் விற்பனைசெய்து வருகிறேன். தற்போது 300 பெட்டிகளில் தேனீக்களை வளர்த்துவருகிறேன்.

தேனீ வளர்ப்பில் என்ன வருமானம் கிடைக்கும்?

300 தேனீ பெட்டிகளை, பூக்கள் பூக்கும் பருவத்தில் இருக்கும் பப்பாளி, பலா, சப்போட்டா, கொத்தமல்லி மற்றும் வேப்பிலை போன்ற தோட்டத்தில் கொண்டு வைத்து அதன் மூலம் தேன் சேகரித்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் 4 மாதத்திற்கு 300 பெட்டிகளிலிருந்து 200 கிலோ தேன் பெறலாம். ஒரு கிலோ தேன் ரூபாய் 700, 800 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேனில் மதிப்புக் கூட்டப்பட்ட பல பொருட்களை செய்து விற்பனை செய்யலாம். நான் தேன் ரோஜா குல்கந்து, தேன் பூண்டு என சில பொருட்களை செய்தும் விற்பனை செய்கிறேன். மேலும் தேனில் சோப்பு தயாரிக்கலாம். தேன் அடைகளில் கிடைக்கும் தேன் கூட்டு மெழுகில் லிப் பாம் தயாரிக்கலாம். நான் ஆன்லைன் மூலமாக தேனை விற்பனை செய்து வருகிறேன். அதேபோல் மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட் களையும் விற்பனை செய்கிறேன். சிறு தொழில் முனைவோருக்கு பண்ணை விவசாயிகளுக்கு ஏற்ற தொழில் இது.

தேனீப்பெட்டிகள் எப்படி இருக்கும்?

தேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப்பெட்டிகள்தான். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டை களால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு அடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும்.முதலில் தேனீ வளர்ப்புக்காக இடம் தேர்வு செய்வது முக்கியமானது. இதற்காக தேர்வு செய்யப்படும் இடத்தை சுற்றிலும் 2 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்களுக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருக்க வேண்டும். பூச்சி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் பயிர்களுக்கு அருகில் தேனீக்களை வளர்க்கக் கூடாது. ஏனென்றால் பூச்சி மருந்துகள் தேனீயின் மனநிலையை மாற்றி இறக்கச் செய்யும். தேனீப் பெட்டிகளை நிழலில் கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். ஒரு தேனீப் பெட்டிக்கும் இன்னொரு தேனீப் பெட்டிக்கும் குறைந்தது 4 மீட்டர் இடைவெளி விட்டு வைக்க வேண்டும். இதனால் வேலைக்காரத் தேனீக்கள் இடம் மாறி செல்வது தவிர்க்கப்படும்.

தேனீ மற்றும் தேன் வகைகள் குறித்து சொல்லுங்களேன்?

மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகிய ஐந்து வகைத் தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. எனினும், இவற்றில் இந்தியத் தேனீ மட்டுமே தேனீ வளர்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.தேனீ வளர்க்க ஆரம்பித்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தேன் எடுக்க முடியும். ஒவ்வொரு முறையும் சுமார் 4 கிலோ அளவுக்குத் தேன் கிடைக்கும்.தேன் வகைகளில் புற்றுத்தேன், மலைத் தேன், கொம்புத் தேன், கொசுத்தேன் என பலவகை தேன்கள் உண்டு. இந்த கொசுத்தேன் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது. கேன்சருக்கான மிக சிறந்த மருந்து எனலாம். ஒரு கிலோ 5000 வரை விலைபோகக்கூடியது. தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமே கிடைப்பதில்லை. தேன் மெழுகு, அரச உணவு எனப்படும் ‘ராயல் ஜெல்லி’ ஆகியவையும் கிடைக்கின்றன. ராயல் ஜெல்லி’ என்று சொல்லப்படும் அரச உணவு வேலைக்காரத் தேனீக்களுக்கு தான் சுரக்கும். பெரும்பாலும் மருந்துப் பொருட்களாக தான் பயன்படுத்தப்படுகின்றன.

தேனீ வளர்ப்பில் வேறு என்ன பயன்கள் இருக்கிறது?

தேனீயைக் கொட்ட வைத்து மூட்டுவலி நீக்குவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உயிரினப் பன்மையை வளர்ப்பது போன்ற மற்ற பயன்களையும் தேனீக்கள் தருகின்றன. பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

உங்களுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்?

சாதனைப் பெண்கள் விருது மற்றும் மிகவும் பொறுப்புள்ள தொழில் முனைவோர் விருதும் கிடைத்துள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் திங் டூ டே நிகழ்வில் விவசாயத் தொழில் பண்ணை மூலம் ஸ்டால் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். சில கல்லூரிகளில் மோட்டிவேஷ்னல் ஸ்பீச் கொடுக்க அழைப்பதும் எனக்கு மிகவும் பெருமை சேர்க்கும் சிறந்த விஷயம்தான். மேலும் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்தத் தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலீடு மிகவும் குறைவு. பெண்கள் துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம். இதில் வருமானமும் கணிசமாக கிடைக்கும் என்கிறார் தேனீயை விட சுறுசுறுப்பாக வலம் வரும் பெண் தொழில் முனைவோர் சரஸ்வதி.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

11 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi