Sunday, September 8, 2024
Home » தேன் பொறியில் வீழ்தல் Honey Trapping

தேன் பொறியில் வீழ்தல் Honey Trapping

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

ஒருவரை தன்வசப்படுத்தி கைக்குள் கொண்டு வருவது எனும் உளவியல் தந்திரம் பல காலமாக உலகில் நிலவுகிறது. இன்றைய நவீன உலகில் இது அதிகம் பேசப்படுகிறது. புற்றுநோய் போல் மெல்ல மெல்ல ஒருவரின் அந்தரங்க எல்லைகளை உடைத்து உள்நுழையும் Honey trapping வலையில் வீழ்ந்துவிட்டால் சுயத்தை இழந்து நடைபிணமாகிவிடக்கூடும் அபாயம் இருக்கிறது. ஆண் பெண் என இருபாலரும் தேன் பொறி வைத்து இலக்கான எதிர்பால் நபரை குறிவைத்து திட்டமிட்டு வலையில் வீழ்த்துவதை பல கதைகளில், திரைப்படங்களில் நாம் அறிந்திருக்கிறோம். ஆயினும் இன்னும் ஆழமாக இதன் ஆரம்பநிலைகளையும், பாதிப்புகளையும் முழுமையாக அறிந்து கொள்ளுதல் சுயபாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகிறது.

தேன்பொறியில் சிக்க வைத்தல் என்பதன் அடிப்படையைப் பார்க்கும் பொழுது குற்றவியல் புலன் விசாரணைகளின்படி நிலைகளில் உண்மையை அறியும் ஆராய்ச்சிக்காக முதலில் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் பெறுவதற்குக் கடினமான தகவல்களைத் திரட்டுவதற்காக காதல் அல்லது காமத்தை ஒரு பகடையாகப் பயன்படுத்தி வசியப்படுத்துதல் என்றாகிவிட்டது. அக்காலத்தில் நம் முன்னோர் இந்தத் தந்திரங்களை மனோவசியம், மாந்த்ரீகம், தந்த்ரீகம், சொக்குப்பொடி என்று பல பெயர்களில் எடுத்துக் கூறி நம்மை எச்சரித்து உள்ளனர்.

நமக்குத் தேவையானவற்றையெல்லாம் அவர்கள் செய்யும்படியான நிலைமைக்கு கொண்டுவந்துவிடுவதே இந்த Honey Trapping -இன் முக்கிய நோக்கம். கிட்டத்தட்ட எதிராளியை அடிமையாகச் செய்வது, உணர்வுரீதியாக திரிபுகள் (Manipulate) செய்வதோடு, அவரின் பயங்களையும், விருப்பங்களையும், தனிப்பட்ட ஆர்வங்களையும் வைத்து விளையாடுவார்கள். அவர்கள் மேல் நம்பிக்கை உருவாக ஆரம்பக் கட்டத்தில் சில நற்செயல்களைச் செய்துவிட்டு பிறகு அவர்களுக்கு சாதகமானவற்றைச் செய்பவர்களாக உங்களை ஆக்கிவிடுவார்கள்.

உங்களுக்கு எதிரான சான்றுகளையும் அந்தரங்கத் தகவல்களையும் அறிந்து உங்களுக்கு எதிரான சான்றுகளையும் முன்பே தயாரித்துவிடுவார்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்யமுடியாது. காதல், காமம் மற்றும் போதை போன்றவற்றைக் கருவியாகக் கொண்டு வைக்கப்படும் தேன் பொறியில் வீழ்ந்தவர் நிலை வெறும் கைப்பாவையே.

எளிய உதாரணங்களாகப் பார்த்தால், கஜினி திரைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கப் பெண் சிட்டி என்ற கதாபாத்திரத்தை அறிமுகமில்லாவரின் காமம் என்ற ஈர்ப்பு வலையில் சட்டென சிக்கவைத்து நிலைகுலைய வைப்பார். விலைமதிப்பு மிக்க வைரத்தை திருடிச் சென்றும் விடுவார். பில்லா திரைப்படத்தில் நயன் நடித்த ஸாஷா கதாபாத்திரமும் தவறு செய்பவர்களைப் பழி வாங்க குளியலறைக் கவர்ச்சியோடு ஆண் ஒருவரை honey trap செய்து பழி வாங்குவதைக் கூறலாம்.

போகன் திரைப்படத்தில் அழகிப்போட்டியில் முதலிடம் வாங்கியிருக்க வேண்டிய பெண்ணின் தாயாரை அரவிந்த்சாமி கதாபாத்திரம் கொன்று விடும். தனிமை உணர்வை உருவாக்கிவிட்டு பிறகு அவரே ஆறுதல் கொடுப்பதாக நடித்து அப்பெண்ணைத் தன்வயப்படுத்துவதையும் பார்க்கலாம்.இப்படிப் பல திரைப்படங்களிலும், அதிகப் பணமும் குற்றங்களும் சகஜமாகிவிட்ட மேல்தட்டு மற்றும் நிழல் உலகில் மட்டுமே இருந்துவந்த ( honey Trapping ) தேன்பொறி தற்போது நம் வீடு வரைஎட்டிவிட்டது. அக்கம் பக்கத்திலும் வெவ்வேறு வடிவில் நமக்குத் தெரியாமல் இத்தந்திரம் இடம்பிடித்து உள்ளது என்பது அதிர்ச்சியான உண்மை. நோக்கம் நிறைவேறும்வரை honey Trapping தொடரும். எலியைப் பிடித்துக் கொல்ல வைக்கப்படும் சுவைமிக்க மசால்வடை போலவே இப்பொறியில் தேனாக ருசிக்கும் வசியபோதை மாறுபட்ட அளவுகளில் அவ்வப்போது வழங்கப்படும்.

இந்தச் சூழ்ச்சியின் தன்மையை அறிந்துகொள்ள சற்று ஆழமாக அலச வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டால் எளிதில் வலையில் விழாமல் தப்பிக்கலாம். ஒன்று honey Trapping செய்பவர் வழங்கும் சலுகை (காதல், காமம் /போதை) குறைவான அளவாகவோ அபூர்வமாகவோ இருக்கும்.

ஒரு போதாமை நிலை இன்னும் வேண்டுமென்ற ஏக்க உணர்வை தூண்டுவதாக அந்த வசியம் இருக்கும். இரண்டாவதாக, பழகியவுடனேயே அந்தரங்க தகவல்களை விரைவில் பகிரக் கேட்பார்கள். மூன்று, இந்த உறவுக்குச் சரியான பெயரைக் குறிப்பிட்டு, அது திருமணம், நல்ல நட்பு போன்ற சரியான இலக்கை நோக்கி நகராமல் தேக்க நிலையிலேயே இருக்கும். மேலும் முக்கோணத் தோற்றமாயை (Triangulation ) செய்வதும் உண்டு. அதாவது வேறு ஒருவர் அவருக்கு நம்மைவிட நெருக்கமாக இருக்கிறாரோ அல்லது உங்களுக்கு வேறொருவருடன் தொடர்பு இருக்கிறதோ என்பதான குழப்பங்கள், சந்தேகங்களுக்கான முகாந்திரம் அடிக்கடி ஏற்படும். இப்படி குழம்பும் பொழுது அந்த உறவில் சுவாரசியம் ஏற்பட்டு இன்னும் இன்னும் ஆழமாக அந்த உறவில் நாம் பிணைய விரும்புவோம்.

தனித்து எதுவும் செய்ய முடியாத செயலற்ற (Dump state) நிலைக்கு நம்மை அறியாமலே நம்மை கொண்டு சென்று விடுவார்கள். எதைச் செய்தாலும் அதனைக் குறைவாக மதிப்பிட்டு (Devaluing ) தன்னம்பிக்கையைச் சிதைப்பதும் Honey Trapping- இன் முக்கியமான படிகளில் ஒன்று.பாய்ஸ் திரைப்படத்தில் திரைக்கலைஞர் செந்தில் அவர்களின் பாத்திரம் கூறுவதை நினைவுபடுத்திப் பாருங்கள் ‘‘Information is wealth” – ஆம் தகவல்களே மிகப்பெரும் சொத்து. அதி முக்கியமான இரகசியத் தகவல்களைச் சேகரிப்பது காவல் குற்றவியல் துறை, இராணுவத்துறை, சர்வதேச தீவிரவாதங்களுக்கு எதிரான புலனாய்வு மற்றும் பாதுகாப்புத்துறை போன்றவற்றின் தலையாய கடமையாகிறது.

அதன் பொருட்டு அவர்களும் நிகழக்கூடிய குற்றங்களைக் கணிக்கவும், தாக்குதல்கள் மற்றும் போர்களைத் தடுப்பதற்காகவும் Honey Trapping – முயற்சிகளை பயன்படுத்துவதுண்டு. பழைய ஜேம்ஸ்பாண்ட் திரில்லர் படங்களில் நாம் அவற்றைப் பார்த்திருக்கிறோம். யார் யாரோடு இருக்கிறார்கள்? யார் என்ன நகர்வுகளைச் செய்கிறார்கள்? அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும்? என்று அறிந்துகொள்ளும் ராஜதந்திரம்தான். ஆனால் அது இன்று தனிநபர் வாழ்வைக் குலைக்கும் வகையில் தவறாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தந்திரத்தை மேற்கொள்ளும் நபர் தான் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தேவையான எல்லாத் தகவல்களையும் பெற்று விடுவார். நாம் கூறும் தகவல்களை வைத்துக்கொண்டு அவர்கள் செல்லாத இடங்களில் , சந்திக்காத நபர்களுக்கெல்லாம் அவர் நண்பர் ஆகிவிடுவார். அவர்களைப் பற்றிய இரகசியங்களையும் நம் வாயிலாகத் தெரிந்து விடுவார்கள். எனவே, அந்த மூன்றாம்/நான்காம் நபர்களைப் பற்றியும் அந்தரங்கங்களை அறிந்துவைத்து black mail செய்ய வாய்ப்பு அதிகம்.

இன்னொரு பக்கம் அவர்களோடு நெருங்கிப் பழகி உங்களைப் பற்றி எனக்கு தெரியும் என்று சொல்லி விடவும் கூடும். ‘‘என்னடா இது இவ்வளவு சீக்கிரம் நம்மைப் பற்றி எல்லாம் சொல்கிறார்” என்று அவர்களும் அந்த நபரோடு நெருங்கி தேன் பொறியில் வீழ்வார். கடைசியில் நாம் தனியாக நிற்போம். இப்படி மிக ஆபத்தான உளவியல் தந்திரமான honey Trapping மூலமாக எதனையும் பெறலாம், சேர்க்கலாம், பிரிக்கலாம் என்று எல்லைகள் விரியும். மனித உணர்வுகளையும், அந்தரங்க விழைவுகளையும் வைத்து என்ன வேண்டுமானாலும் விளையாடலாம்.

You may also like

Leave a Comment

14 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi