போன எல்லா இடங்களிலும் மாட்டி கொண்டதால் விரக்தி திருட வந்த வீட்டில் சிக்கியதால் தூக்கு போட்ட கொள்ளையன்: சேலை கிழிந்ததால் உயிர் தப்பினார்

திருப்பூர்: திருப்பூரில் திருட கூட தெரியவில்லையே என்ற விரக்தியில் திருட வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், ஊத்துக்குளியை அடுத்த திம்மநாயக்கன்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேலு (42). இவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வடிவேலு அம்மிக்கல் செய்யும் பட்டறையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வடிவேலு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர், மெதுவாக உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு ஒரு வாலிபர் இருந்தார். பின்னர் அவர் நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? என்று கேட்டார். சுதாரித்த வாலிபர் தன்னிடம் இருந்த 40 ரூபாயை காட்டி நான் பணம் கொடுக்க வந்தேன் என்று கூறினார். பேச்சு கொடுத்தவாறே வடிவேல் பீரோவை பார்த்தார். அது திறந்து கிடந்தது. வாலிபர் வீட்டில் திருட முயன்றதை அறிந்த வடிவேலு அவரை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தினார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஊத்துக்குளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மாட்டிக்கொண்டதை அறிந்த வாலிபர் பல்வேறு வழிகளில் தப்பிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. பின்னர் வடிவேலுவிடம், வாலிபர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார்.

ஆனால், வடிவேலு அதற்கு சம்மதிக்கவில்லை. போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சிய வாலிபர் வீட்டில் இருந்த சேலையால் தூக்குப்போட்டார். ஆனால், சேலை கிழிந்து கீழே விழுந்தார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வீட்டுக்கு வந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், திருப்பூரில் உள்ள பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.

மேலும், இஸ்மாயில் போலீசாரிடம் கூறுகையில், ‘எனக்கு 9 சகோதரிகள் உள்பட 13 பேர் உடன் பிறந்தவர்கள். குடும்பத்தை காப்பாற்ற போதிய வருமானம் இல்லாததால் திருட்டில் ஈடுபட முடிவு செய்தேன். அதன்படி, அருகில் உள்ள பெருமாநல்லூர், அவிநாசிபாளையம், ஊத்துக்குளி ஆகிய 3 இடங்களில் திருட முயன்றேன். ஆனால், 3 இடங்களிலும் மாட்டிக்கொண்டேன். சரியாக திருடக்கூட தெரியவில்லையே என்ற அவமானத்தில் தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், சேலையும் கிழிந்து விழுந்துவிட்டேன்’ என்று சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் இஸ்மாயிலை கைது செய்தனர்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்