வீட்டில் தூங்கும்போது ஏசி தீப்பிடித்து எரிந்து தொழிலாளி கருகி பலி

செய்யாறு: வீட்டில் தூங்கும்போது நள்ளிரவில் ஏசி தீப்பிடித்து எரிந்து தொழிலாளி கருகி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் காமராஜ்(60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(58). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் காமராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி, கூழமந்தல் கிராமத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார். இதனால், காமராஜ் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு உதவியாக பேரன் வினோத்குமார் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த காமராஜ், தனது அறையில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியுள்ளார். வேலைக்கு சென்றிருந்த பேரன் வினோத்குமார் நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, காமராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து கரும்புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், மின்சாரத்தை துண்டித்து விட்டு அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஏசி தீப்பிடித்து எரிந்து, மெத்தை மீது விழுந்து தீப்பிடித்ததில், காமராஜ் தீயில் கருகி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்