தொடர் விடுமுறை காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்; கூடுதலாக 2 கவுன்டர்கள் திறப்பு

செங்கல்பட்டு: தொடர் விடுமுறையை முன்னிட்டு, பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் வசித்து வரும் ஏராளமானோர் நேற்று முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து, கார், பைக் என பல வாகனங்களில் செல்லத் தொடங்கினர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மகேந்திராசிட்டி, பரனூர், திம்மராஜபேட்டை, புவிப்பாக்கம் என 4 கிலோ மீட்டர்தூரத்திற்கு நேற்று வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 6 பூத்களும், அதே போல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 6 பூத்கள் என மொத்தம் 12 பூத்களில் அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க பரனூர் சுங்கசாவடியில் கூடுதலாக 2 கவுன்டர்களை திறந்து 8 பூத்களில் வாகனங்களை அனுப்பினர். போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுக்கும் போது இதேபோல், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே அதிகாரி கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’