Saturday, September 28, 2024
Home » அவன் தம்பி

அவன் தம்பி

by Lavanya

பகுதி – 2

“யாரடா நாயகன்! உன் நாயகன்! உன்னைப்போல இருக்கும் குறைந்த அளவிலான வானரப்படையை வைத்துக் கொண்டு குட்டையைப் போல இருக்கும் கடலைப் பாலம் கட்டி, அதைத் தாண்டி இங்கு வந்திருக்கிறார்களே! அது ஒரு கூட்டம்! அதற்கு ஒரு நாயகன்! நீ அவன் தூதுவன்! இதுதான் உலகத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை! போதும் போதும் இங்கிருந்து உடனே கிளம்பிப் போய்விடு அல்லது இங்கே உள்ள அரக்கர்கள் எல்லோரும் உன்னைத் தின்று, மென்று விடுவார்கள்! உனக்கு உயிர்ப் பிச்சைத் தருகிறேன் ஓடிவிடு உடனே.”“கொஞ்சம் பொறு இராவணா! என் நாயகனைப் பற்றித்தான் கூறினேன். என்னை நீ யார் என்றே கேட்கவில்லையே!”

“சரி சொல் நீ யார்?”

“உன்னை நினைக்கையில் எனக்கு எப்பொழுதும் பழைய ஒரு சம்பவம்தான் ஞாபகத்திற்கு வரும். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது நான் அழுதுகொண்டிருப்பேன். அப்பொழுது எனக்கு விளையாட்டுக் காட்ட உன்னை பொம்மை போல தொட்டிலில் கட்டி ஆட்டிவிடுவார் என் தந்தை. பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கிக் கடைந்த போது அவர்களுக்கு களைப்பு ஏற்பட என் தந்தை வலிமையான தன் பலமிக்க தோள்களால் பாற்கடலை கடைந்ததாக வரலாறு உண்டு! அது மட்டுமா, அவருக்கு உற்சாகம் ஏற்பட்டால் உன்னை தனது வாலில் கட்டி மலைக்கு மலை தாவுவாராம்! இப்பொழுது யார் என்று தெரிகிறதா! ஆம் ‘வாலி’, அதுதான் என் தந்தையின் பெயர்! ஞாபகம் வருகிறதா?”

“என்னது? நீ வாலியின் மைந்தனா?” வாலியின் பெயரைக் கேட்டதும் இராவணன் கொஞ்சம் ஆடித்தான் போனான். இராவணன் சற்று சுதாரிப்பதற்குள் அங்கதன் தொடர்ந்தான்.“இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா? சற்று முன்னர் என் சிறிய தந்தை, ஆம், வாலியின் தம்பி சுக்ரீவன் இங்கே வந்து உன்னுடன் சண்டையிட்டு உன் மணி முடியைத் தட்டிவிட்டு, அதைக் கொண்டு சென்றானே ! தெரியுமா?”

“என் அருமை அங்கதா! நீ வாலியின் மைந்தன் என்றதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. உன் தந்தை வாலி எனக்கு உற்ற நண்பன். நீ எதற்காக இந்த மானிடப் பதர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறாய்! அவர்களுக்கு தூதுவனாக வேறு வந்திருக்கிறாயே! கொஞ்சம் யோசித்துப் பார். நீ யாருடைய பக்கத்தில் நிற்கிறாய்? உன் தந்தை வாலியைக் கொன்றவனுடன் சேர்ந்திருக்கிறாய்! நீ என் பக்கம் வந்து விடு.”

“நீ பேசுகின்ற பேச்சில் ஒரு வார்த்தை கூட என் செவிகளில் விழவில்லை. என் நாயகன், என் தலைவன், இராமனுக்கு எதிராக நான் ஒருபோதும் ஒரு சிறு செயலிலும் கனவில்கூட ஈடுபடமாட்டேன்.”“அங்கதா! நீ என் பக்கம் வந்து விட்டால்….நீ எனக்கு மகன் போல ! இன்னும் சிறிது நாளில் சீதையும் என் வசம் வந்து விடுவாள். பிறகென்ன, நீ, சீதை, நான்… இதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.!”

“எங்கள் இராமனின் தேவி சீதையை நீ சிறைபிடித்தபோதும் கூட போர் தர்மத்தை கடைப்பிடித்து என்னைத் தூதுவனாக அனுப்பிய என் நாயகனின் அற வழி எங்கே? தூதுவனாக வந்தவனையே உன் அணிக்கு சேரச் சொல்லும் உன் சிறுமதி எங்கே?”“அங்கதா! உனக்கு இந்த சுக்ரீவனைக் கொன்று கிஷ்கிந்தை நாட்டையே உனக்கு அளித்து விடுகிறேன். நீ ராஜாவாக இருக்க வேண்டியவன். இப்படி மானிடப்பதர்களுடன் சேர்ந்து இருப்பது உனக்குத் தேவையில்லாத ஒன்று.”

“என்ன சொன்னாய் இராவணா? நீ எனக்கு கிஷ்கிந்தை அரசைத் தரப் போகிறாயா? அதை நான் ஏற்பேன் என்று நினைக்கிறாயா? உன்னிடமிருந்து அதைப் பெறுவது எதற்குச் சமம் தெரியுமா? ஒரு சிங்கம் தனது அரசாட்சியை ஒரு நாயிடம் இருந்து பெறுவதற்கு சமம்.”“அங்கதா! நீ நினைப்பது போல் இந்த இலங்கைக்குள் வந்து அந்த மானிடர்கள் என்னை வென்றுவிட்டுச் சென்றுவிட முடியுமா? என்னை வெல்ல முடியுமா? இந்த இலங்கையில் சிவனோ, விஷ்ணுவோ, பிரம்மனோ, ஏன் அந்தக் காலனோகூட நுழைவதற்குப் பயப்படுவார்கள். இது என் சாம்ராஜ்யம். இங்கு யாரும் என்னை அழித்து விட முடியாது.”

“இராவணா! நீதான் உன்னைப்பற்றி பெருமை பீற்றிக்கொள்கிறாய். எல்லோரும் நீ போர்புரிவதில் திறம் பெற்றவன் என்று கூறுகிறார்கள்! எனக்கென்னவோ அது போலத் தெரியவில்லை! நீ ஓடி ஒளிந்து கொள்வதில் தான் திறம்பெற்றவன்!”“என் தந்தை வாலியின் வால் நுனி இருக்கும் இடத்தில் கூட நிற்க துணிவின்றி ஓடி ஒளிந்தவன் தானே நீ!”“உன் பாட்டி தாடகையை என் நாயகன் துவம்சம் செய்த போது அங்கு இல்லாமல் ஓடி ஒளிந்தவன் தானே நீ! மாரீசனை பொன்மானாக அனுப்பி வைத்து, அவனை என் நாயகன் வதம் செய்த போதும் அங்கே நிற்காமல் ஓடி ஒளிந்தவன்தானே நீ!”

“யாரும் இல்லா நேரத்தில் சீதாதேவியைக் கவர்ந்து சென்று பின் ஓடி ஒளிந்து கொண்டவன் தானே நீ!”“சீதா தேவியை தேடி என் தமையனுக்கு இணையான அனுமன் வந்த போதும், தன் வாலில் வைத்த தீயால் இலங்கையை எரித்த போதும், நேரில் வராமல் ஓடி ஒளிந்தவன்தானே நீ!”“வானரப் படைகள் இலங்கைக்கு வந்து சேர்ந்ததும், அந்தப் படையை கண்டும் காணாதது போல், மேல் மாடத்திலிருந்து பார்த்துவிட்டு ஓடி ஒளிந்தவன்தானே நீ!”“என்னைத் தூதுவனாக அனுப்பும் பொழுது என் நாயகன் என்ன கூறி அனுப்பி வைத்தார் தெரியுமா? ‘அங்கதன் வீரத்தின் விளைநிலம். இவன் எப்படி செல்கிறானோ அப்படியே வந்து சேர்வான்’ என்று கூறினார்.”

“என் நாயகன் சொன்ன வார்த்தை என் மேல் அவர் வைத்த நம்பிக்கையுடன் கூடிய பாசம்!. நான் அவர் மேல் வைத்திருப்பது நம்பிக்கையுடன் கூடிய மரியாதை!. புரிந்துகொள்! நாங்கள் என்றுமே அறம் வழியில் நிற்பவர்கள்.”“இராவணா! முடிவாகக் கேட்கிறேன் இரண்டில் ஒன்று நீ பதில் சொல்லியே ஆக வேண்டும். எங்கள் தேவியை விடு இல்லையேல் உன் ஆவியை விடத் தயாராகு!”“சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிவிட்டு, அங்கிருந்து அங்கதன் புறப்பட்டான்.

அங்கதன் கூற்றுக்களைக் கேட்ட இராவணனின் பத்து தலைகளும் கொஞ்சம் களைத்துத் தான் போனது. ‘என்ன இது வாலியின் பரம் பரையே நம்மைச் சும்மா விடாது போலிருக்கிறதே! ஒரு காலத்தில் வாலி தன் வாலில் கட்டி என்னை அலைக் கழித்தான். அவன் மைந்தன் இவன் என்னை வாயால் கட்டியே அலைக்கழித்து விடுவான் போலிருக்கிறதே!’ தனக்குள் பேசிக் கொண்டான். பதிலேதும் பேசாமல் நின்றான்.”

இலக்குவன் தொடர்ந்தான். “அங்கதன் இராமனிடம் சென்றான். வணங்கினான். நடந்தவற்றைச் சொன்னான். யுத்தம் மூண்டது இறுதியில் இராவணன் மாண்டான். நான், இராமன், சீதை எல்லோருமாக அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் வரை நடந்தேறியது.”“ஊர்மிளா! இதுவரை நடந்த எல்லா நிகழ்வுகளையும் உன்னிடம் கூறிவிட்டேன்.”“இதில் அங்கதன் எங்கெல்லாம் என் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தான் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.”“அங்கதனிடம் இத்தனைச் சிறப்புகளா? எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சொல்லுங்கள். கேட்கிறேன்.” என்றாள் ஊர்மிளா.

“ஒரு விதைக்குள் பல காடுகள் இருப்பதாகக் கூறுவார்கள். ஒவ்வொரு விதைக்கும் முளைப்பதற்கு சாதகமான சூழல்- ஒளி, காற்று, அதற்கு ஏற்ற மண் போன்றவை இருக்க வேண்டும் . விதைக்கப்பட்ட எல்லா விதைகளும் முளைப்பதில்லை. நல்ல சூழல் இருந்த போதிலும், பல சமயங்களில், பல விதைகள் முளைக்காமல் போனதுண்டு.”“அங்கதன் என்கின்ற விதை போதுமான சூழல் இல்லாதபோதிலும் முளைத்து விருட்சமாக நின்றதுதான் இதில் போற்றுதற்குரியது. அவன் வீரியமுள்ள வித்து.”“சற்று அந்தச் சூழலை உன் மனதிற்குள் கொண்டு வா ஊர்மிளா! சுக்ரீவனுக்காக, வாலியை மறைந்து நின்று அம்பை எய்து விட்டு, வாலியின் அருகில் இராமன் நிற்கும்போது அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்?” “தன் தந்தை வாலி இறக்கும் தறுவாயில், அருகில் நின்றிருந்த, அங்கதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

இராமனும் அங்கதனும் முதன் முதலாக சந்தித்துக் கொள்கின்ற அந்தக் கணப் பொழுதில் இராமனின் மனதில் அங்கதன் மேல் தோன்றிய நம்பிக்கை, அங்கதனுக்கு ராமனின் மேல் தோன்றிய பக்தி, இரண்டுமே எப்படி ஒருசேர நிகழ்ந்திருக்கிறது!”“இராமன் அந்த நேரத்தில் அங்கதனுக்கு உடைவாளைக் கொடுத்தது முக்கிய நிகழ்வு. அதை விடவும் அங்கதனுக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்தது பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தி எல்லோருடனும் நின்றிருந்ததுதான். சூரிய குலம் அங்கதனுக்கு கொடுத்த மாபெரும் கௌரவம் அது!“ஆமாம் எனக்கு இப்போது அது விளங்குகிறது. நன்றாகக் குறிப்பிட்டீர்கள்.”

“அடுத்ததாக குறிப்பிடத் தகுந்தது, இராமன் அங்கதனைத் தூதுவனாக அனுப்பியது. இராவணன் வாலியின் ஒரு காலத்திய நண்பன். வாலியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த இராமன், தூதுவனாக அங்கதனை ராவணனிடம் அனுப்பிவைத்தது, எவ்வளவு பெரிய நம்பிக்கைக்குரிய செயல்! சொல்லின் செல்வன் அனுமனுக்கு இணையாக ஒரு பதவியை, அங்கதனுக்கு அளித்தது அற்புதம். இன்றும் ஒரு மாபெரும் வழக்காடு சொல்லாக மாறிப்போன “அவன் தம்பி அங்கதன்” அதாவது அனுமனின் தம்பி அங்கதன் என்கின்ற மாபெரும் பெயர் அங்கதனுக்குக்கிட்டியது.“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரதமுனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும் படைத்தவன் இராவணன். அப்படிப்பட்டவனின் அரசவைக்குச் சென்று அவனுக்கு எதிராக அழகாக வாதம்புரிந்தது போற்றுதலுக்குரியது.”

“எல்லாவற்றுக்கும் மேலாக மகுடம் வைத்தது போல இருந்த நிகழ்வு எது தெரியுமா? அங்கதன் தன் தோள்களில் என்னைச் சுமந்து இலங்கைக்குச் சென்றதுதான்.”“அப்போது காரணம் கண்டுபிடிக்க இயலாத ஒரு உள்ளுணர்வு எனக்குத் தோன்றியது. ஆதிசேஷன் திருமாலைச் சுமந்திருந்ததாக அறிவேன். அந்த ஆதிசேஷனை யாராவது , என்றாவது சுமந்திருக்கிறார்களா? இந்த எண்ணம் எனக்குள் ஏன் வந்தது என்று புரியவில்லை.”“அங்கதன் தன் தோள்களில் என்னைச் சுமந்துகொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு இனம் புரியாத பந்தத்தை உணர முடிந்தது. அங்கதனின் அருகாமை எனக்கு மிகவும் பலமாகப்பட்டது. இது எல்லாமும் இராமனின் கருணை தானே.

ஆமாம். அவன் அருளின் ஆழியான் அல்லவா!’’“உங்களைச் சுமந்த அங்கதன் உங்களை நெகிழ வைத்துவிட்டான். அதனால் நான் சுமந்த நம் குழந்தைக்கு அங்கதன் என்று பெயர் வைத்தீர்கள் போலும். இதை எண்ணுகையில் எனக்கும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நம் பிள்ளைக்கு மிகவும் பொருத்தமான பெயர்!” ஊர்மிளா கண்கள் பனிக்க இலக்குவனின் மார்பில் சாய்ந்தாள். சரயுநதிக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

கோதண்டராமன்

You may also like

Leave a Comment

20 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi