இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

சென்னை: “இந்துக்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது; இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்” என சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில்; “இந்தியா எல்லோருக்குமான தேசம். ராமாயணம் போன்ற சமய நூல்களில் வெறுப்பு அரசியல் பற்றி குறிப்பிடவில்லை அதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் புரிந்து கொள்ள வேண்டும். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியாரை வழிபட்டு விட்டு தான் ரங்கநாதர், ராமானுஜரை பார்க்க முடியும்.

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே எவ்வளவு நெருக்கம் இருக்கிறது என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ராமநாதபுரம் பரமக்குடியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட, ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் 500 ஆண்டுகளுக்கு மேல் பச்சை நிற உண்டியலும், மஞ்சள் நிற உண்டியலும் உள்ளது. இஸ்லாமியர்கள் இந்து தெய்வத்தை வணங்கிவிட்டு, அவர்கள் மதத்தின் சார்பாக காணிக்கை செலுத்துகிறார்கள்.

இதையெல்லாம் அண்ணாமலையும், மோடியும், அமித்ஷாவும், பார்த்துவிட்டு வரவேண்டும். இந்த நாட்டில், தேசத்தில், மண்ணில் இந்து, முஸ்லிம் ஒற்றுமை. எவ்வளவு, மேலோங்கி இருந்துள்ளது என்று. இந்த உண்மைகள் இப்படி இருக்க, பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் மத துவேஷங்களையும், மதவெறுப்பு அரசியல்களையும் இந்தியாவில் எவ்வளவு காலம் செய்ய முடியும்?.

ஆகவே சட்டப்பேரவையில் நான் ஆற்றிய உரையில் முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். இந்து, முஸ்லிம் ஒற்றுமை, இந்து, முஸ்லிம் இணக்கம், தமிழ்நாட்டில், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக, எப்படி வேரூன்றி இருந்தது? இதை, வட மாநிலங்களுக்கு, புத்தகமாக, நீங்கள் போட்டு, அனுப்ப வேண்டும்.

ஒரு கும்பல் மதரீதியாக பிளவுபடுத்தி, குளிர்காயலாம், அதிகாரத்தை பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி நேற்றைய உரையில் தெளிவாக கூறியுள்ளார். எங்களுக்கு அதிகார பசி இல்லை, இந்த நாட்டில் அன்பை விதைக்க வேண்டும், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆகவே, நீங்கள், மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று, கேட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்