இமயமலையில் மலையேற்றம் சென்ற 9 பேர் பரிதாப சாவு

உத்தரகாசி: மோசமான வானிலை, பலத்த காற்று, பனிப்பொழிவால் இமயமலையில் மலையேற்றம் சென்ற 9 பேர் பரிதாபமாக இறந்தனர். கர்நாடகாவை சேர்ந்த 18 பேர் கடந்த 29ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைக்கு மலையேற்றத்திற்கு சென்றனர். இவர்கள், 4 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் உள்ள சகஸ்டிராடல் ஆல்பைன் ஏரியை பார்க்க சென்றனர். அவர்களுடன் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் மற்றும் இமாலயன் வியூ டிரக்கிங் என்ற மலையேற்ற நிறுவன ஊழியர்கள் 3 பேரும் சென்றனர். இந்த குழுவினர் நாளை உத்தரகாசியில் உள்ள தங்களின் இடத்திற்கு திரும்ப இருந்தனர். மலையேற்றம் சென்றுவிட்டு உத்தரகாசிக்கு திரும்பும் வழியில் மோசமான வானிலையால் தடம் மாறினர். இதனால் கர்நாடகத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடகாவை சேர்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக 4 பேர் சென்றனர். மோசமான வானிலை காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மலைப்பகுதியில் வழிதெரியாமல் பரிதவித்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் டேராடூன் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் பேசினேன். அப்போது அவர்கள் மலையேற்றம் சென்று விட்டு முகாமிற்கு திரும்பியபோது வானிலை மோசமடைந்தது. பலத்த காற்றும், பனிப்பொழிவும் ஏற்பட்டதில் சிக்கி கொண்டனர். என்பது தெரியவந்தது. உத்தரகாண்ட் அரசின் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய உள்துறையின் மீட்பு படையினர் அவர்களை மீட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்; 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு