ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கோவிந்தராஜுலு அவரது மனைவி சுஜாதா காந்தாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்தது. விரைவில் முதலீட்டை விட அதிகளவு பணத்தை எங்கள் நிறுவனம் மூலம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இதை நம்பி ஏராளமானவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பல கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து அந்த நிறுவனம் முதலீடு பெற்றது. இருப்பினும் கூறியபடி அந்த நிறுவனம் வட்டி தொகை வழங்காமல் இருந்துள்ளது. வட்டித்தொகையை கேட்டாலும் நிறுவனம் சார்பில் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து முதலீடு செய்த மக்கள் நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பொதுமக்களை ஏமாற்றியது உண்மை என்பது தெரியவந்தது.மொத்தம் 89,000 பேரிடம் பணம் பெற்று அந்த நிறுவனம் பல கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹிஜாவு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் 30க்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சுஜாதா காந்தா ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனராக இருந்தது தெரிய வந்தது.

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹிஜாவு நிறுவனம் ரூ.4400 கோடி வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ரூ.75.6 கோடி அசையா சொத்துக்களும், ரூ.90 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 8 கார்கள்,162 வங்கி கணக்கில் இருந்த ரூ.14.47கோடி பணம் முடக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிய அலெக்சாண்டர், இயக்குநர் மகாலட்சுமியை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு: சரத்குமார் இரங்கல்

தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!!

திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி