நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது: விக்கிரவாண்டி தேர்தல் முடிந்த பின்பு நிச்சயம் வழக்கு தொடர்வேன்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேட்டி

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த காலத்தில் அவருடைய சம்பந்திக்கும் மற்றவர்களுக்கும் முறைகேடாக நெடுஞ்சாலை துறையில் டெண்டர் அளித்ததில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது எனவும், விசாரிக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தேன். அவர்கள் விசாரிக்காத காரணத்தினால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அதில் புகார் கொடுத்தும் விசாரிக்கவில்லை என சொன்னவுடன், நீதிமன்றத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.

இதில் சிபிஐ., விசாரணை கேட்கவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கேட்டதெல்லாம், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்காததால், தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போதைய அரசு தரப்பில் பதில் மனு போட்டார்கள். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. நான் வழக்கை வாபஸ் பெற்றேன் என எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் பேசுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ., விசாரணையை 11-9-2018 முதல் துவக்க உத்தரவிடுகிறது. இதையடுத்து, 29-10-2017 அன்று எடப்பாடி பழனிசாமி இதில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறுகிறார்.

பின்பு 2022ல் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ஏற்கனவே விசாரணை சரியில்லை என்பதால், மாநில காவல்துறை சார்பாக விசாரணை துவங்கி நடைபெற்றது. இதன் காரணமாக ஒரே வழக்குக்கு இரண்டு விசாரணை வேண்டாம் என்ற அடிப்படையில் நான் அளித்த மனுவை திரும்ப பெற்றேன். எப்படி ஜெயலலிதா, டான்சி வழக்கில் மாற்றி பேசி மாட்டிக் கொண்டாரோ அதுபோல இன்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். வழக்கு தொடர காலம் இருப்பதால், விக்கிரவாண்டி தேர்தல் முடிந்தவுடன், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவின் ஆலோசனை பெற்று, திமுக தலைவரின் அனுமதி பெற்று, இந்த வழக்கை நான் மீண்டும் தொடர இருக்கிறேன்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்