உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ரயில் மறியல் போராட்டம்

சென்னை: கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணூர் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலையில் உயரழுத்த மின்கம்பியில் இருந்து ரயில்களுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி பழுதடைந்ததால் சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

எனவே, நேற்று காலை ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்லக்கூடிய பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேராக ரயில் செல்லும் எனவும் வேறு எந்த ரயில் நிலையத்திலும் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால், கொதிப்படைந்து பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட ரயிலை மறித்து பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாள்தோறும் சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக கூறி ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில் நிலைய அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எண்ணூர் ரயில் நிலையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ரயில் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இதனை அடுத்து ரயில் பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கும், சென்னை சென்ட்ரலுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4வழிப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொடர்ந்து புறநகர் ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

Related posts

முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90.42 கோடிக்கான காசோலை: அறநிலையத் துறை ‘ஷாக்’

விக்கிரவாண்டி அருகே ரூ.1 கோடி பறிமுதல்: டாக்டர் காரில் சிக்கியது

கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்