உயர் விளைச்சல் நெல் விதை வழங்க ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: உயர் விளைச்சல் நெல் ரகங்களின் சான்றுவிதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.8 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதத்திற்கு பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க 18 மாவட்டங்களில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். உற்பத்தியைப் பெருக்கிட ரூ.10 கோடியே 19 லட்சம் மானியத்தில் பசுமைக் குடில், நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.

மழையிலிருந்து வேளாண் விளை பொருட்களைப் பாதுகாத்திட 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.10 கோடி செலவில் பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஏற்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும். 2,000 மெட்ரிக் டன் மிகச்சன்ன வகை உயர் விளைச்சல் நெல் ரகங்களின் சான்றுவிதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.8 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

காய்கறிகள் விலையினைக் கட்டுக்குள் வைக்கும் விதமாக சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல்வலைக் குடில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 25 முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலைமைச் செயல் அலுவலர்களை நியமித்து உழவர் வணிக செயல்பாடுகளை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படும். 20 உழவர் சந்தைகளில் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்படும். திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு பூங்கா, சென்னை செம்மொழிப் பூங்கா, ராமநாதபுரம் பாலை மரபணுப்பூங்கா ஆகியவை ரூ.1.22 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது