நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இதை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்று 3 கோடியை திருப்பி செலுத்தியது. மீதி தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பி தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் திருப்பி தராமல் அயலான் படத்தை வெளியிட தடை கேட்டு டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புக்கும் இடையே சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். இதே தயாரிப்பு நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடியை செலுத்தாமல் படத்தை வெளியிட தடை கேட்டு எம்.எஸ்.சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு