உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: தங்களது மாநில உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை நியமனம் செய்யாமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறி ஜார்க்கண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவற்றை தாக்கல் செய்திருந்தது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, “அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

எனவே இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என தெரிவித்தார். அப்போது ஜார்க்கண்ட் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி நியமனம் செய்யாமல் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும் இதுபோன்ற செயல்பாடுகளால் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே விசாரணையை ஒத்தி வைக்காமல், நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஆலோசிக்கப்பட்டு பரிந்துரைத்த நீதிபதிகளை நியமனம் செய்வதில் ஒன்றிய அரசு தாமதம் செய்ய காரணம் என்ன? எத்தனை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமனம் செய்யப்படாமல் இருப்பவர்களுக்கான காரணங்கள் என்ன? என்று சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை