அதிக வட்டி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 3 பேர் சிக்கினர்

நாகர்கோவில்: அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ₹30 கோடி வசூல் செய்து மோசடி செய்த தந்தை, மகனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (72). இவரும் மகன்கள் ஆனந்தராஜன் (42), அரவிந்த ராஜன் (38), அரனீஸ் ராஜன் (32), ஆனந்தராஜனின் மனைவி நேசிகா (33) ஆகிய 5 பேரும் சேர்ந்து உண்ணாமலைகடை அருகே ஏஜென்சி நடத்தி முந்திரி ஏற்றுமதி – இறக்குமதி செய்து வந்தனர்.

இந்த நிறுவன மேலாளராக விரிகோடு பகுதியை சேர்ந்த அனீஸ்(31) பணியாற்றி வந்தார். இவர்கள் தான்சானியா நாட்டில் இருந்து முந்திரியை மொத்தமாக வாங்கி துபாய், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை சரிசெய்ய மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்ய முடிவு செய்தனர்.

தங்களின் ஏஜென்சியில் பணம் செலுத்துபவர்களுக்கு 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதனை நம்பி அப்பகுதியில் உள்ள மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். முதல் ஒரு வருடம் வட்டி பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக‌ வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பலர் இந்த ஏஜென்சியில் முதலீடு செய்தனர். ஆனால் ஏஜென்சி நடத்தி வந்தவர்கள் திடீரென தலைமறைவானார்கள். இது தொடர்பாக இரணியல் அருகே மேல சங்கரன்குழி பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் மணிகண்டன்(46) எஸ்.பி. சுந்தரவதனத்திடம் அளித்த புகாரில், நான் ₹20 லட்சம் முதலீடு செய்து இருந்தேன். ஓரிரு மாதம் வட்டி வந்தது. பின்னர் வழங்கவில்லை. கடந்த ஆண்டு ஏஜென்சி திடீரென மூடப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என கூறியிருந்தார்.

எஸ்பி உத்தரவின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக 83 பேர் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஏஜென்சி உரிமையாளர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நட்டாலம் பகுதியை சேர்ந்த அரனீஸ் ராஜன், சுந்தரராஜன் மற்றும் மேலாளர் அனீஸ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஆனந்தராஜன், அரவிந்தராஜன், நேசியா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்