மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் சிக்கல்கள்

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தன் நண்பர்களோடு ஆனந்தமாய்ப் பேசிக்கொண்டும் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடும் செல்வதை நாம் பார்க்கிறோம். பல்வேறு பாரங்களோடு பயணம் மேற்கொள்ளும் நாம் மாணவர் பட்டாளத்தைப் பார்க்கும்போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி பற்றிக்கொள்கிறது. குழந்தை முகங்கள் எப்போதும் வெள்ளந்தியாக இருப்பதால் நமக்கு அந்தச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அவர்களுக்குள் எந்தக் கவலையுமே இல்லையா? என்றால் விடை கேள்விக்குறிதான்.

பெரும்பாலான மாணவர்களின் மனதில் ஏதோ ஒருவிதமான கவலை பரவி யிருக்கிறது. கவலை என்பது பொருளாதாரம் குறித்து இல்லை. மாணவர்களுடைய கவலைகளை ஒரே மாதிரியாக நாம் வகைப்படுத்திவிடவும் முடியாது. கவலை ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமானது.

இதைக் கருத்தில்கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை எடுத்துவரும் ‘நான் முதல்வன்’, ‘தமிழ்ப்புதல்வன்’ போன்ற பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன. நம்பிக்கையூட்டுகின்றன. அதே சமயம் இவை பொதுவான சிக்கல்களுக்கான தீர்வுகள். மாணவர்களின் தனிப்பட்ட கவலைகளுக்குப் பள்ளிக் கல்வித்துறையால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சமூகம் அப்படி ஒதுங்கி இருக்க முடியாது. ஏனென்றால் மாணவர்களின் கவலைகள் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தவை. ஊடுருவிப் பார்த்தால் இவை மிகவும் நுட்பமானவை. ஆழமானவை. மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்க்கக்கூடிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.‌

பொதுவான சிக்கல்கள்:

மாணவர்களின் பொதுவான எதிர்பார்ப்புகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிகாட்டுதல்களைப் பள்ளிக்கல்வித் துறை போதுமான அளவுக்கு வழங்கிவிடுகிறது.எனவே, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் கவலைகளுக்கான தீர்வுகளைச் சமூகம் வழங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு மாணவரும் இந்த நாட்டின் சொத்து. மனிதவளம். சரியான பாதையில் செம்மையாக வழிநடத்தும்போது அவர்கள் இந்த நாட்டிற்கு ஒன்றுக்குப் பலவாக திருப்பித் தருவார்கள். தேசத்தின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்ப்பார்கள். ஒருவேளை மாணவர்களின் தனிப்பட்ட கவலைகள் தீர்க்கப்படாமல் போனால் நல்ல மரத்தில் ஒட்டுண்ணி பாய்ந்து அழிப்பது போல நாட்டிற்குச் சேதாரமாகக் கூட அமைந்துவிடும். மாணவர்களின் சிக்கல்களை நீங்கள் படித்தால் வியப்பாக இருக்கும்.

மனப்பான்மை மயக்கம்:

மாணவர்களுக்கு எந்த விதமான மனப்பான்மையும் இருக்கக்கூடாது. தான் பெரியவன் என்ற உயர்வு மனப்பான்மையோ தன்னால் எதுவும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ இருக்கக் கூடாது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இன்று தாழ்வு மனப்பான்மை பரவியிருக்கிறது. ‘நமக்கு இது செட் ஆகாது’ என்ற ஒரு வரி வாசகம் கூறும் மாணவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அறிவியல் எனக்கு செட்டாகாது, விளையாட்டு எனக்கு செட் ஆகாது, இலக்கியம் எனக்கு செட் ஆகாது, எனக்கு எதுவுமே செட் ஆகாது என்று தனக்குத்தானே ஒரு வரையறை வைத்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். ‘செட் ஆகாது’ என்ற வார்த்தை தாழ்வு மனப்பான்மையின் அறிகுறி. ஏன் அவர்கள் அப்படிக் கூறுகிறார்கள்? என்று பார்த்து அவர்களுக்குத் திரும்பத் திரும்ப முயற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.‌

ஒரே முயற்சியில் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைகிறபோது நமக்கும் அந்தப் பாடத்திற்கும் ஆகாது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.‌ அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதற்கும் வெற்றி பெறும் வரை முயற்சி செய்வதற்கும் நாம் ஆலோசனை கூற வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் உண்மையிலேயே திறமை இருந்தும் ஒரே ஒரு முயற்சியில் முட்டி மோதி திரும்பிவிடுவார்கள்.‌

தோற்றமும் மாற்றமும்:

சில மாணவர்கள் உருவத்தில் குறைபாடோடு இருக்கிறோம் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். குள்ளமாக இருக்கிறோம், உயரமாக இருக்கிறோம், குண்டாக இருக்கிறோம், ஒல்லியாக இருக்கிறோம் என்றெல்லாம் வருத்தப்படு கிறார்கள். ஒரே ஒரு கேள்வி கேளுங்கள், அவர்கள் உருவம் குறித்த மனப்பான்மையிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

ஒரு மனிதன் வேறு எப்படித்தான் இருக்கமுடியும்? என்று கேளுங்கள். எப்படி இருந்தாலும் இந்தச் சமூகம் ஒருவனின் உருவத்தைப் பார்த்து குறை சொல்லக் காத்திருக்கிறது. மேலும் உருவம் குறித்த கவலைகளிலிருந்து வெளிவர அவர்கள் ஏதாவது ஒரு சாதனை செய்தால் போதும், பிறகு சாதனை அந்த மாணவனின் அடையாளமாக மாறிவிடும். குள்ளமாக இருக்கும் ஒரு மாணவர் உயரம் தாண்டுதலில் முதல் பரிசு பெற்றுவிட்டால் அவனை இந்த உலகம் விளையாட்டு வீரன் என்று அடையாளப்படுத்தி அழைக்க ஆரம்பித்து விடும். அந்தக் குள்ளமான மாணவரை அவருடைய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வந்து வெற்றி வீரனாக வைக்க வேண்டிய பொறுப்பு இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

முடியின் நீளம் குறைவாக இருந்தால், நிறம் குறித்த கவலைகள். இவை இரண்டையும் வைத்துக்கொண்டு வாழ்க்கை குறித்து கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். கவிதை, விளையாட்டு, இலக்கியம் என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போது எந்த ஒரு மாணவியும் தங்களுடைய தாழ்வுமனப்பான்மை கவலைகளிலிருந்து விடுபட முடியும்.

குடும்பக் கவலைகள்:

நான் சந்திக்கிற மாணவர்களிடம் பார்க்கிற இன்னொரு பிரச்னை குடும்பச் சண்டை. இது கிராமத்தில்தான் இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தாலும் நகரத்திலும் இது அதிகமாக இருக்கிறது. கணவன், மனைவி தங்கள் குழந்தைகளின் முன்பாகவே சண்டை போட்டுக் கொள்ளும் போது மாணவர்கள் அதை கேட்க முடியாமல் பார்க்க முடியாமல் அஞ்சுகிறார்கள். எங்கே தாய் தந்தை இருவரும் பிரிந்துவிடுவார்களோ? என்ற கவலை வந்துவிடுகிறது. அதற்காக அவர்கள் மனதுக்குள் மறுகுகிறார்கள். கவலைகொள்கிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்குள் சிக்கல்களைப் பேசித் தீர்த்துக்கொண்டு குழந்தைகள் முன் மகிழ்ச்சியாகச் செயல்படுவதே மாணவர்களைக் குடும்பக் கவலைகளிலிருந்து விடுவிக்கும்.

பள்ளிச்சூழல்:

உங்கள் கவலைக்கு என்ன காரணம்? என்று சில மாணவர்களை கேட்டால் எனக்கு அந்த ஆசிரியரை பிடிக்கவில்லை. அவர் வகுப்பிற்கு வந்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அவர் பீரியட் எப்போது முடியும் என்று காத்திருப்பேன் என்கிறார்கள். இது ஆசிரியர்கள் அவசியம் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயம். நீங்கள் மாணவர்களிடம் அன்பாக இருக்கும்போதுதான் அவர்கள் உங்கள் பாடத்தை விரும்பிப் படிப்பார்கள்.‌ மாறாக நீங்கள் பிரம்பு கம்போடு சுற்றும்போது அது அதிகப்படியான வெறுப்பை ஏற்படுத்திவிடும். சில ஆசிரியர்களுக்கு பயந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதையே விட்டுவிடுகிறார்கள்.‌ ஒரு மாணவன் இடைநிற்றலுக்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்துவிடக் கூடாது.‌ ஆசிரியருக்கு பயப்படும் சில மாணவர்கள் அதை வீட்டில் சொல்லவும் பயப்படுகிறார்கள். பயத்துடன் பள்ளிக்கு வருவது போன்ற பரிதாபகரமான சூழிலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு உருவாக்கக்கூடாது. இதுபோன்ற விஷயங்களை மாணவர்கள் தங்களது பெற்றோரிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்தித்து சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

(இன்னும் படிப்போம்)

Related posts

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!