கறுகறு கூந்தலுக்கு செம்பருத்தி எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில், மாறி வரும் பழக்க வழக்கங்களாலும், உணவு பழக்கத்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை தலைமுடி உதிர்தல், இளநரை போன்றவையாகும். தலைமுடியின் ஆரோக்கியத்தை கொண்டே ஒருவரது உடல் ஆரோக்கியத்தையும் சொல்லிவிடலாம். அந்தளவிற்கு ஆரோக்கியத்துடன் கூந்தல் ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, இன்று பலரும், மருத்துவமனைக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து வருகின்றனர். சிலர், ரசாயனம் கலந்த பலவித க்ரீம்கள், எண்ணெய்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவை எல்லோருக்கும் தீர்வு தருகின்றதா என்றால் கேள்விக்குறிதான். எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதே நல்லது.

அதுபோல, பெண் குழந்தைகள் வளரும் போதே அவரது கூந்தலுக்கு பொருந்தும் சரியான எண்ணெயை தேர்ந்தெடுத்து, அந்த ஒரே எண்ணெயை பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும். இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி அடர்த்தியாக, பொலிவாக, நரையில்லாமல் வைத்திருக்கலாம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். அந்தவகையில் செம்பருத்தி இலைகள், மற்றும் பூக்களில் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

செம்பருத்தி பலவகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது மட்டுமின்றி அதிக குளிர்ச்சியை கொண்டுள்ளது. இதனால் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு செம்பருத்தி நல்ல பலனை தரும். முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை, இளநரை போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்து கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உதவுகிறது.

ஏனெனில் செம்பருத்தி எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மயிர்கால்களை தூண்டி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

செம்பருத்தி எண்ணெயின் நன்மைகள்

செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது. இளநரையை வராமல் தடுக்க செய்கிறது. நரை பிரச்சனை தவிர்க்க உதவுகிறது. முடிக்கு அடர்த்தி கொடுக்கிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பொடுகு பிரச்சனை அதிகரிக்காமல் செய்கிறது.உச்சந்தலையில் தொற்று வராமல் தவிர்க்கிறது. முடியை ஃப்ரீஸ் ஆக்காமல் தடுக்கிறது. முடி வறட்சியை தவிர்த்து, முடி உடைதலை தடுக்கிறது. இப்படி முடி பிரச்சனை அனைத்தையும் தீர்க்க உதவும் செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.

செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் முறைகள் சிலவற்றை பார்ப்போம்…

செய்முறை -1
தேவையானவை
செம்பருத்தி பூக்கள் – 30
ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்
தேங்காயெண்ணெய் – கால் லிட்டர்
வெந்தயம் – 5 தேக்கரண்டி.

செய்முறை: இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். அடுப்பு மிதமான சூட்டில் இருக்க வேண்டும். செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து நறுக்கவும். கால் கைப்பிடி அளவு இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில்
சேர்க்கவும்.

மற்ற இதழ்களை அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். எண்ணெயை குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயை காய்ச்சலாம்.இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் விரல்களில் தொட்டு மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் போதும். கூந்தலில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடும்.

குழந்தைக்கு எண்ணெய் குளியலின் போது இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்கக் கூடியது. வேறு எண்ணெய் எதையும் பயன்படுத்தாமல் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியமாக செழித்து வளரும். வயதானவர்களும் இதை பயன்படுத்தலாம்.

செய்முறை -2
தேவையானவை
செம்பருத்தி பூ – 10
செம்பருத்தி இலை -10
தேங்காய் எண்ணெய் – 1 கப்.

செய்முறை: செம்பருத்தி பூ இதழ்கள் மற்றும் இலைகளை எடுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அதை ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். வாரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணெயைக் கொண்டு 10 நிமிடங்கள் தலை மற்றும் முடியை மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ரசாயனம் குறைவான ஷாம்புவால் தலைக் குளிக்க, முடி உதிர்வது குறையும். மேலும் முடி கருமையாவதுடன், உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

தொகுப்பு: ரிஷி

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!