மாதவரத்தில் உள்ள ஆவினுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்க வேண்டும்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: பேரவையில் நேற்று நீர்வளம், இயற்கை வளம் மற்றும் தொழில் நலன், திறன் மேம்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மாதவரம் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம் (திமுக) பேசியதாவது: மாதவரம் தொகுதியை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களில் ஏறக்குறைய ரூ.187 கோடிக்கு நீர்வளத் துறை மூலமாக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லாத வகையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

மாதவரத்தில் உள்ள ரெட்டேரியை ஆழப்படுத்துவதற்காக, ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் டோல்கேட் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.1,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒன்றிய அரசு தயார் நிலையில் உள்ளது. அவர்கள் வைத்திருக்கின்ற கோரிக்கை என்னவென்றால், (டிஎன்ஜிஎஸ்டி) வரியை தமிழ்நாடு அரசாங்கம் விலக்கிக் கொண்டால், ஒன்றிய அரசு அதற்கான பணத்தைக் கொடுத்து, அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் என்று சொல்லியிருக்கிறது.

அதைத் தயவு செய்து பரிசீலனை செய்து நிறைவேற்றித் தர வேண்டும். மாதவரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லை. எனவே, அங்கே அதைத் தயவு செய்து அமைத்துத் தர வேண்டும். புதிய தாலுகா மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பொன்னேரி தாலுகா 9 பிர்க்காக்களைக் கொண்டது. ஏறக்குறைய 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சென்னை மாவட்டத்தைவிட ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு கொண்ட இந்த வட்டம், பெரியதாக இருப்பதால், இதைத் தயவு செய்து 2 வட்டங்களாக பிரித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியத்திலுள்ள மோரை ஊராட்சி, பாலவீடு ஊராட்சி, பொத்தூர் ஊராட்சி போன்றவை சென்னை அல்லது ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மூலம் 15 ஆயிரம் குடும்பங்கள் 100 நாட்கள் வேலைவாய்ப்பை இழக்கின்ற நிலை ஏற்படுகிறது. எனவே, தயவு செய்து அதை நிறுத்த வேண்டும்.

ஹைடெக் சிட்டி ஒன்று சென்னையிலே உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. அதைத் தயவு செய்து மாதவரத்திலே உருவாக்கிட வேண்டும். அங்கு ஆவின் மற்றும் கால்நடை துறைக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் இருக்கிறது. அடுத்ததாக, மகசூலுக்கு காப்பீடு வேண்டுமென்று பல ஆண்டுகளாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த ஆண்டு கூட ‘மா’ மகசூல் நன்றாக இல்லை. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதையும் செய்து தர கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!