ஒருநபர் ஆணையம் உள்ள போது மகளிர் ஆணையம் விசாரணை ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது : ஹென்றி திபேன்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கள்ளச் சாராயம் குடித்ததில் 6 பெண்களின் பலி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளதோடு, நடிகை குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தலைமைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஒருவாரத்தில் அறிக்கை ஆணையம் கேட்டுள்ளது. விஷச் சாராய விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் உள்ளது. விசாரணை ஆணையம் உள்ள நிலையில் மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் அறிக்கை கேட்பது சட்டத்துக்கு முரணானது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் தலைவர் இன்றி பொறுப்பு தலைவர் மட்டுமே உள்ளார். நீதிக்காக இயங்க வேண்டிய மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சொல்லிட்டாங்க…

முதல்வர் பெருமிதம் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நீர்வளத்துறை – மணிவாசன்; பொதுப்பணித்துறை – மங்கத் ராம் சர்மா; சுகாதாரத்துறை – சுப்ரியா சாகு