Sunday, September 8, 2024
Home » கோழி வளர்ப்பில் கொட்டுது லாபம்!

கோழி வளர்ப்பில் கொட்டுது லாபம்!

by Porselvi

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, குதிரையாறு அணை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹனிபா. இவர் கடந்த 4 ஆண்டுகளாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார். மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில், பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் குதிரையாறு அணை சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் பயணித்து முகமது ஹனிபாவைச் சந்தித்தோம். “எம்பெருமான் முருகன் அருளும் பழனிதான் எங்கள் சொந்த ஊர். கொடைக்கானல் மலையடிவாரத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். சிறுவயது முதலே கால்நடை வளர்ப்பில் அதிக நாட்டம். அதிலும் நாட்டுக்கோழி வளர்க்க வேண்டும் என்பது முதல் விருப்பமாக இருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். மலையடிவாரத்தில் அடுக்கு அடுக்காக மூன்று கூரை அமைத்து சிறுவிடை, இடைவெட்டு என நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். முதலில் பழனியில் இருந்து எனக்கு தெரிந்தவரிடம் இருந்து 50 நாட்டுக்கோழியை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். இன்றைக்கு அது 3000 நாட்டுக்கோழியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம்தான்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் புறக்கடை வளர்ப்பு, ஆழ்கூள முறை, கூண்டுமுறை என 3 விதமான வளர்ப்பு முறைகள் உள்ளன. புறக்கடை வளர்ப்பு என்பது பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக வளர்க்கும் முறை. இதற்கு குறைந்த முதலீடே போதும். ஆனால் வணிக நோக்கத்தில் வளர்க்க ஆழ்கூளம் மற்றும் கூண்டுமுறைகளைப் பின்பற்றலாம். கூண்டு முறை வளர்ப்புக்கு அதிக முதலீடு தேவைப்படும். ஆழ்கூளமுறை என்பது சிமென்ட் தரை கொண்ட கொட்டகையில் நெல், உமி, மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு அல்லது கடலைத் தோல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை ஆழ்கூளமாக பயன்படுத்தி கோழிகளை வளர்ப்பதாகும். இதில் ஆழ்கூளப்பொருட்கள் விரைவில் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும். விரைவில் நன்றாக உலரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சிமென்ட் தரையில் 2 அங்குல உயரத்திற்கு ஆழ்கூளத்தை அமைக்க வேண்டும். காற்றோட்டம் குறைவாக இருந்தால் ஆழ்கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகி விடும். எனவே ஆழ்கூளத்தின் ஈரப்பதம் 25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பதுதான் நல்ல பலன் தரும். இது ஒரு நல்ல தொழில்நுட்ப உத்தியாகவும் இருக்கும். ஆரம்பத்தில் நாட்டுக்கோழிகளை கூண்டு முறையில் வளர்க்கும்போது முதலீடு சற்று அதிகமாகவே இருக்கும். அதேநேரத்தில் பராமரிப்பு செலவு என்பது மிகவும் குறைவாக இருக்கும். கூண்டுமுறை வளர்ப்பில் கொட்டகையின் உயரம் குறைந்தபட்சம் 12 முதல் 15 அடி வரை இருக்க வேண்டும். மேலிருந்து கீழ்ப்பகுதி வரை கம்பிவலை கொண்டு 6 அடி உயரத்திற்கு குறையாமல் அமைத்தால் தரைமட்ட அளவில் நல்ல காற்றோட்ட வசதி இருக்கும். அப்போது எச்சத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி எச்சம் நன்கு உலர்ந்து காணப்படும். நாட்டுக்கோழிகளின் எச்சம் கூண்டு வழியாக கீழே விழுந்து விடுவதால் எச்சத்திற்கும், நாட்டுக் கோழிகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. ஆழ்கூளம் வாங்கும் செலவும், அதனை பராமரிக்க வேண்டிய சிரமங்களும் கூண்டு வளர்ப்பில் கிடையாது. கூண்டுமுறையில் வளர்ப்பதால் ஒட்டுமொத்த பராமரிப்பே எளிதாகி விடுகிறது. கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்க்க முற்படும்போது கட்டிடத்தின் மைய உயரத்தை அதிகரித்து கட்டுகிறோம். இதனால் வெப்பக் காலங்களில் கோழிகளுக்கு ஏற்படும் கழிச்சலை தவிர்க்கலாம். கோழி வளர்ப்புக்கு 3 அடிக்கு 3 அடி நீள அகலமும், 1.5 அடி உயரமும் கொண்ட கூண்டுகளைப் பயன்படுத்தலாம். இந்த அளவு கொண்ட கூண்டுகளைப் பயன்படுத்தும்போது ஒரு மாத வயது கொண்ட 30 கோழிகளையும், 40 நாட்கள் வரையுள்ள 15 கோழிகளையும், 50 நாட்களுக்கு மேலான விற்பனை வயது கொண்ட 10 கோழிகளையும் வளர்க்கலாம்.

கோழிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கட்டிடங்களின் நீளத்தை தேவையான அளவுக்கு நீட்டி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்டிடங்களின் அகலம் 22 அடிக்கு மேல் அமையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிடங்களின் தரைப்பகுதி வெப்பக்காலங்களில் அதிகமான வெப்பத்தை ஈர்த்து சூடாகி விடாமல் குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் பண்ணை மலையடிவாரத்தில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். அதுபோக கோழிகளுக்கு கழிச்சல் பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு கூரையினையும் கொஞ்சம் இடைவெளி விட்டு அமைத்திருக்கிறேன். நாட்டுக்கோழிகளைப் பொருத்தவரையில் 7 லிருந்து 8 வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். எங்களது பண்ணையில் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் வைத்திருப்போம். இதனால் நல்ல தரமான முட்டைகள் மற்றும் ஊட்டமான கோழிக்குஞ்சுகள் கிடைக்கிறது. பெட்டைக் கோழியை சேவலுடன் விட்ட 20வது நாளில் கோழிகள் முட்டை வைக்கத் தொடங்கிவிடும். காலை 11 மணியளவில் பண்ணைக்கு வந்து முட்டைகளை சேகரித்து எடுத்து வைத்துக்கொள்வேன். அடையாளத்திற்காக ஒவ்வொரு முட்டையின் மீதும் பென்சில் மூலம் எண்களை எழுதி வைத்துக் கொள்வேன். பெட்டைக்கோழி 8வது முட்டையிடும்போது அவயத்துக்கு தயாராகிவிடும். இந்த தருணத்தில் அவையம் வைத்தால் 13 கோழிக்குஞ்சுகள் வரை பொரிக்கும். நாங்கள் அவயத்திற்கு தவிடுகளை பயன்படுத்துவது கிடையாது. ஆற்று மணல் மட்டுமே பயன்படுத்துகிறோம். தவிடுகளில் அடை வைத்தால் ஈரப்பதத்துடன் பொரித்து வரும் கோழிக்குஞ்சுகளின் மீது தவிடு ஒட்டிக்கொள்ளும். இதனால் சில கோழிக்குஞ்சுகள் இறக்க நேரிடும்.

அவயம் வைத்த 21வது நாளில் கோழிக்குஞ்சுகள் பொரித்துவிடும். இதற்கிடையில் மேய்ச்சலுக்கு அவயத்து கோழிகள் வெளியில் செல்லாமல் இருக்க கூரைக்கு உள்ளேயே 4க்கு 8 அடி என்ற கணக்கில் ஆற்று மணலைக் கொட்டி வைத்து கோழிகள் பிரண்டும் வகையில் தயார் செய்து இருக்கிறோம். கோழிக்குஞ்சுகள் பொரித்த 1 வாரம் வரையிலும் தாய் பெட்டைக்கோழியின் அரவணைப்பில் முழுவதும் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். இதனால் கோழிக்குஞ்சுகளுக்கு தேவையான சூடு கிடைக்கும். பின்னர், தாய்க்கோழிகளுடன் குஞ்சுகளை மேய்ச்சலில் விடுவோம். மேய்ச்சலில் இருக்கும் குஞ்சுகளை காகம், கழுகு, பருந்து போன்றவை தூக்கிச் சென்றுவிடும். இதனைத் தவிர்க்க கோழிகள் மேயும் இடம் முழுவதும் வலை அமைத்திருக்கிறேன். அதேபோல் தாய்க்கோழிகளுடன் இருக்கும் குஞ்சுகள், 3 மாத குஞ்சுகள், 5 மாத குஞ்சுகள், இனப்பெருக்கத்திற்கு தயாரான கோழிகள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வாழ்விடங்கள் அமைத்திருக்கிறோம். இதனால் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்ளாது. குஞ்சுகளுடன் பெட்டைக்கோழிகள் மேய்ச்சலில் இருக்கும்போது சேவல் தொந்தரவு இருக்காது. 75 நாட்களுக்கு பிறகே குஞ்சுகளை தாய்க்கோழியிடம் இருந்து பிரித்து வைப்போம்.

மலையைச் சுற்றி மூலிகை செடிகள் அதிகம் இருக்கும். இதனை கோழிகள் சாப்பிடும்போது எந்தவொரு நோயும் தாக்காது. இதுவே நல்ல ஒரு ஆண்டிபயாட்டிக்காக இருக்கும். இதனால் நாங்கள் கோழிகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் போடுவது கிடையாது. கோழிக்குஞ்சுகள் பொரிக்க இன்குபேட்டர் பயன்படுத்துவது கிடையாது. நோய்களில் இருந்து காக்க வாரம் ஒருமுறை கோழிகளை திறந்து விடுவதற்கு முன்பு குப்பைமேனி தழை, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகை தழைகளைக் கொண்டு புகை போடுவோம். இந்தப் புகையைக் கோழிகள் சுவாசிப்பதால் சளி பிரச்சினை இருக்காது. கல்லீரல் பிரச்சனையும் வராது. நிலத்தில் 2 ஏக்கர் அளவிற்கு கொய்யாக்காய் மரத்தினை கோழிகளுக்காவே நடவு செய்திருக்கிறேன். இதில் விளையும் கொய்யாக் கனிகள் முழுவதையும் கோழிகளுக்கு இரையாகக் கொடுக்கிறேன். இதனால் கோழிகளுக்கு கழிச்சல் நோய் வருவதில்லை. 150 இலவ மரங்களையும் நடவு செய்துள்ளேன். கொய்யா மற்றும் இலவம் பஞ்சு மரத்தில் இருந்து கொட்டும் இலைகளை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சேகரித்து தண்ணீர் தெளித்து வைப்பேன். இதில் கரையான்கள் அதிகம் வரும். இதனை கோழிகள் மேயும் இடத்தில் கொட்டிவிடுவேன். இந்த கரையான்களை கோழிகள் சாப்பிடுவதால் நல்ல புரதச்சத்தும் கிடைக்கிறது.

முழுக்க முழுக்க இயற்கை தீவனம், இயற்கை வைத்தியம் என்று நாங்கள் நாட்டுக்கோழிகளை இயற்கை முறையிலேயே வளர்ப்பதால் எங்களைத் தேடி வந்து கோழிகளை வாங்கி செல்கிறார்கள். பெரும்பாலும் நாங்கள் முட்டைகளை அவயத்திற்கே பயன்படுத்துகிறோம். விற்பனை செய்வது கிடையாது. ஒரு கிலோ நாட்டுக்கோழியை ரூ.575 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். நேரடியாக பண்ணைக்கு வந்து கோழிகளை வாங்கி செல்பவர்களுக்கு ரூ.50 குறைத்து கொடுப்போம். நானே நேரடியாக சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்தால் பெட்ரோல் செலவு, ஏற்றுக்கூலி, இறக்குகூலி என்று கணக்குபோட்டு ஒரு கிலோ கொண்ட நாட்டுக்கோழியை ரூ.550 என்ற கணக்கில் விற்பனை செய்வேன். வருடத்திற்கு சராசரியாக 1500 கோழிகளை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் சராசரியாக ரூ.8 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவுகள் ரூ.3 லட்சம் போக ரூ.5 லட்ச ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இதுபோக ஆர்டர் மூலம் நாட்டுக்கோழிக்கறி, நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி வறுவல் என விசேஷங்களுக்கு டெலிவரி செய்கிறேன். இதன்மூலமும் ஒரு வருமானம் கிடைக்கிறது. இலவம்பஞ்சினையும் சீசன் காலங்களில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் வருடத்திற்கு சராசரியாக ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கிறது’’ என்கிறார்.

தொடர்புக்கு:
முகமது ஹனிபா: 70103 01705

You may also like

Leave a Comment

17 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi