உடலில் ரத்தம் உறையாமல் போவதால் உயிரிழப்பு அபாயம் ஆண்கள் மட்டுமே டார்கெட்… ஹீமோஃபீலியாவிடம் உஷாரு…

*கவனமாய் இருந்தால் கண்டம் தப்பலாம்

சிறப்பு செய்தி

விருதுநகர் : உடலில் ரத்தம் உறையாமல் போவதால் உயிரிழப்பு அபாயம் ஏற்படுத்தும் ஒரு குறைபாடு இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் உரிய நேரத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சைகளினால் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கு தமிழ்நாடு அரசும் நவீன மருத்துவமும் துணை நிற்கிறது.

ஹீமோஃபீலியா… கேள்விபட்டிருக்கீங்களா? இது, மனித உடலில் ரத்தம் உறையாமல் போகும் மரபு வழி குறைபாடாகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு, ரத்தம் உறையும் திறன் குறைவாக இருக்கும். சிலருக்கு மரபணு குறைபாடுகளின் காரணமாகவும், வேறு சிலருக்கு தன்னுடல் தாக்குதல் (autoimmune disorder) காரணமாக ரத்தத்தை உறையச் செய்யும் பிளாஸ்மா செயல்பாடு குறைவதாலும் உண்டாகிறது.

ரத்தம் கொட்டும்…

பொதுவாக ஏதாவது காயங்கள் ஏற்படும்போது, உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை உறையச் செய்வதற்கு ரத்தத்தில் உறைவுக்கான புரதங்கள் அதாவது உறைதலுக்கான 13 காரணிகள் சரியான அளவில் இருக்க வேண்டும். ஹீமோஃபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காரணிகளுள், காரணி 8 அல்லது காரணி 9 குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டினால், ரத்தம் உறைவது கடினம் ஆகிறது. ஹீமோஃபீலியா ஏ, காரணி 8 காரணமாக ஏற்படும் பொதுவகை ஆகும். ஹீமோஃபீலியா பி, காரணி 9 காரணமாக ஏற்படும் இரண்டாவது பொது வகை ஆகும்.

ஹீமோஃபீலியா சி, உறைதல் காரணி 11 குறைபாடு காரணமாக ஏற்படும். இவர்களுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக முழங்கால்கள், கணுக்கால் மற்றும் முழங்கைகளில் காயம் ஏற்பட்ட பிறகு, ஒருவருக்கு இயல்பை விட அதிக நேரம் ரத்தம் வரும். இது உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும்.

இந்தியாவில் அதிகம்:

2015ம் ஆண்டு நடத்திய சர்வேயின் படி உலகம் முழுவதும் 5 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா A பாதிப்பு உள்ளது. முப்பதாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா B பாதிப்பு உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் குழந்தைகள் இதுதொடர்பான சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 17 ஆயிரத்து 500 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பதுதான் அதிர வைக்கிறது. இந்த குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே. பெண்கள் ஹீமோஃபீலியாவை தன்னுடைய ஆண் வாரிசுகளுக்கு கடத்திச் செல்பவராக இருப்பார்கள்.

இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி நியமன பேராசிரியரும், குழந்தைகள் நலத்துறை மருத்துவருமான அரவிந்த் பாபு கூறியதாவது:ஹீமோஃபீலியாவை கட்டுப்படுத்த அரசு இரண்டு வழிகளை கையாள்கிறது. ஒன்று வருமுன் காப்பது. இரண்டாவது வந்த பின் சரி செய்வது. இதில் வரும்முன் காப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ஹீமோஃபீலியாவின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு, கர்ப்ப காலத்தில் 13 – 14வது வாரத்தில் பிளாசண்டாவிலிருந்து திசுவை எடுத்து கரு ஹீமோஃபீலியாவால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியலாம். இச்சோதனையை கட்டாயம் செய்ய வேண்டும்.

வந்த பின் சரி செய்ய காரணி எட்டா, ஒன்பதா என்பதை கண்டறிந்து அந்தந்த காரணியை உடலில் நரம்பு மூலம் மருந்தாக வாரத்திற்கு 3 முறை ஏற்றி வருகிறோம். மருந்து ஏற்றப்படும் நபர்களுக்கு காயம் ஏற்படும்போது மற்றவர்களைப் போல் சரியாகி விடும். இதிலும் சிலருக்கு சிக்கல் ஏற்படும். அது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இவர்களை இங்குபிட்டா என்கிறோம். இது சற்றே விரிவாக பார்க்க வேண்டிய ஒன்று ஆகும்.

உடலில் புதிதாக ஒன்று நுழையும் போது அதற்குரிய மாற்றை தயாரித்து அதை எதிர்க்கும் ஆற்றல் என்பது உடலின் பொது தன்மை ஆகும். இவர்களுக்கு காரணிகளை உடலில் மருந்தாக ஏற்றினாலும் உடலின் பொது தன்மை காரணமாக எதிர்ப்பு உருவாகி விடும். மருந்து ஏற்றினாலும் கூட இவர்களுக்கு வேலை செய்யாது. அதாவது காயம் ஏற்பட்டால் ரத்தப்போக்கு நிற்காது. வீக்கம் வற்றாது. இவ்வாறு கண்டறியப்படும் இங்குபிட்டா நபர்களுக்கு பீபா எனப்படும் மருந்து செலுத்த வேண்டும். ஹீமோஃபீலியாவிற்குரிய விலை அதிகமான இந்த அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலையின்றி செலுத்தப்படுகிறது. இவர்களுக்கு டாக்டர்கள் மூலம் ஜெனிடிக் கவுன்சிலிங்கும் அரசு கொடுத்து வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

நோய் பற்றி சந்தேகமா? தொடர்பு கொள்ளலாம்

ஹீமோஃபீலியா குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹீமோஃபீலியா சொசைட்டி என்கிற அமைப்பு நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் மதுரையிலும் இந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. இந்த அமைப்பினர் வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைத்து விழிப்புணர்வு மற்றும் அரசின் மருத்துவ உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பின் மதுரை மண்டல செயலாளர் செல்வ ஜானகி கூறுகையகல், ‘‘எங்கள் மதுரை அமைப்பின் தொடர்பு எண் 90039-68481 ஆகும். இந்த நோய் குறித்த சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்காக எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

 

உதவ தயாராக இருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதற்கான முறையான மருந்துகள் பெருமளவில் இல்லை. தற்போது நவீன மருத்துவம் இவர்களுக்கு கை கொடுக்கிறது. முன்பு ரத்தம் மற்றும் பிளாஸ்மா ஏற்றப்படும். ஆனால் தற்போது என்ன காரணியோ அதை கண்டறிந்து அதனை ஏற்றி வருகின்றனர். இதன்மூலம் விரைவான சிகிச்சை கிடைக்கிறது. முன்பு இந்த நோயின் தன்மையை அறியாத மருத்துவர்களும் இருந்தனர்.

 

தற்போது உள்ள மருத்துவர்கள் இதனை பற்றி ஓரளவு அறிந்துள்ளனர் என்றாலும் இதற்கான தனி மருத்துவர் தேவை. தற்போது ஒரே ஒருவர் சென்னையில் மட்டுமே இருக்கிறார். எனவே இதற்கான தனி மருத்துவரான ஹீமோலாஜிஸ்ட் அதாவது ரத்தவியல் மருத்துவரை அனைத்து அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும்’’ என்கிறார்.

Risk of death due to non-clotting of blood in the body Target only men…Warning to hemophilia…

Related posts

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மதுவிலக்கு சட்டம் இயற்ற வி.சி.க. தீர்மானம்