ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம்

திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பின்னர் 4 வருடங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி, தங்களுடைய அறிக்கையை கடந்த 2019ம் ஆண்டு கேரள அரசிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை 2 வருடங்களுக்குப் பின்னர் கேரள டிஜிபியிடம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை சமீபத்தில் வெளியானது. கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை தொடர்பாக கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை நேற்று உயர்நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது. தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு அரசிடமும், 2021ம் ஆண்டு டிஜிபியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை கையில் கிடைத்த பிறகும் டிஜிபி என்ன செய்து கொண்டிருந்தார்? 4 வருடங்களுக்கு மேலாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

இரு வாரங்களுக்குள் முழு அறிக்கையையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்ற செயல்கள் நடந்திருந்தால் அதன் மீது சிறப்பு விசாரணைக் குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு மூலம் அளித்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியே வரக்கூடாது. இந்த அறிக்கை மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இரு வாரங்களுக்குள் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பொது இடத்தில் ஒரு அனாதை உடல் கிடந்தால் விசாரணை நடத்தாமல் இருப்பீர்களா? அதுபோல இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அரசு உடனடியாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். கேரளா மக்கள் தொகையில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். அப்படி இருக்கும்போது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புகார் கொடுக்க முன்வராவிட்டால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்