ஹெல்மெட் உடைக்கப்பட்டதை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு அடிஉதை வீடியோ எடுத்த பெண் மீது தாக்குதல்: 2 பேர் கைது; திருமங்கலத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: ஹெல்மெட் உடைக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் கம்பெனி ஊழியரை அடித்துஉதைத்தபோது வீடியோ எடுத்த பெண்ணையும் சரமாரியாக தாக்கினர். இதுசம்பந்தமாக 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(51). இவர் தனியார் சீட்டு கம்பெனியில் கலெக்‌ஷன் ஊழியராக பணியாற்றுகிறார். நேற்றுமுன்தினம் திருமங்கலம் பகுதியில் மெடிக்கல் கடை நடத்திவரும் தனது நண்பரை பார்க்க சென்ற போது பைக்கில் தலைகவசத்தை வைத்துவிட்டு நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது குடிபோதையில் வந்த 2 பேர், தலைகவசத்தை எடுத்து உடைத்துள்ளனர். இதை சரவணன் தட்டிக்கேட்டபோது போதை ஆசாமிகள் இரண்டு பேரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சியை அங்குள்ள மெடிக்கல் கடையில் வேலை செய்யும் பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது ‘’எங்களை செல்போனில் வீடியோ எடுக்கிறாயா’’ என்று ஆபாசமாக பேசி பெண் ஊழியரை தாக்கியதுடன் கடையின் கண்ணாடியை உடைத்து விட்டு போதை நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியான திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(25), தினேஷ்குமார்(29) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள்தான் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு