யாவரும் நலம்

ஒரு அரசானது மக்களுக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும். அத்தோடு கடமை முடிந்து விட்டது என பலர் இருந்து விடுவார்கள். ஆனால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என அறியும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரே, மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி, அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அதனை பயனுள்ள வகையில் மெருகேற்றுவது தொடர்பாகவும் பேசுவது, இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத ஒரு அரிய நிகழ்வாகும்.

அதிகாரிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அகலாமல், தானே முன்னின்று களப்பணியாற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். முதல்வரோடு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், கலெக்டர், அனைத்துத் துறை அதிகாரிகள் மக்களை தொடர்பு கொண்டு பேசுவது ஒரு மாறுபட்ட, வரவேற்கத்தக்க அணுகுமுறை. இதன்மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே, கடந்த ஜனவரி இறுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கியிருந்து அரசின் திட்டங்கள், மக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிகாரிகளை தேடி அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்ற நிலையில், அதிகாரிகள் மக்களை தேடி செல்லும் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே, 1.06 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 என ஆண்டுக்கு ரூ.12,000 வரை உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அறிவித்த மாதம் முதல் தங்குதடையின்றி இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தை பின்பற்றி கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுமென திமுக அரசின் திட்டத்திற்கு தங்கள் மாநிலத்திலும் செயல் வடிவம் ெகாடுத்துள்ளது.

இதுமட்டுமா? மகளிர்க்கு அரசு நகர பேருந்துகளில் கட்டணம் இலவசம் திட்டம் மூலம், சுமார் 400 கோடிக்கும் மேற்பட்ட இலவச பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவுத்திட்டம் மூலம் 16 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். சுமார் 4.82 லட்சம் பேர் பயனடையும் புதுமைப்பெண் திட்டம், 28 லட்சம் பேர் திறன் பயிற்சி பெற்ற நான் முதல்வன் திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு என தொடர் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.

அதே நேரம், 2015ல் அறிவித்து, 2019ல் பிரதமர் மோடியாலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, கிடப்பில் கிடந்த எய்ம்ஸ் திட்டம், கிட்டத்தட்ட 3வது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனாலும், பூமி பூஜை என்ற பெயரில் அவசரகதியில் தேர்தல் டிராமா ஒன்று, ஒன்றிய அரசால் நேற்று முன்தினம் அரங்கேற்றப்பட்டது. திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. அதனை செயல்படுத்துதல், செயல்பாடுகளை அறிதல் உள்ளிட்டவைகளை தமிழக அரசிடமிருந்து ஒன்றிய அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு