புனேயில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானி, இன்ஜினியர் உடல் கருகி பரிதாப பலி

புனே : புனேயில் இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானி, இன்ஜினியர் உட்பட 3 பேர் உடல் கருகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், பவ்தான் பகுதியில் இன்று காலை தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தின் போது, ஹெலிகாப்டர் தரையில் மோதி தீ பிடித்து எரிந்ததில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், ஒரு பொறியாளர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர், 2 விமானிகள், ஒரு பொறியாளர் ஆகிய மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட சம்பவம் குறித்து, பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘புனேவின் பவ்தான் புத்ருக் மலைப் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள், ஒரு இன்ஜினியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் யார் யார்?, ஹெலிகாப்டர் யாருக்கு சொந்தமானது? என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி புனேயில் தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் ஜூஹூவில் (மும்பை) இருந்து ஐதராபாத் நோக்கி பறந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. தற்போது மீண்டும் புனேயில் மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பீகாரில் வெள்ளத்தில் கோளாறு காரணமாக வெள்ளத்தில் தரையிறங்கியது ஹெலிகாப்டர்

விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!!

நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம்