குமரி முழுவதும் விடிய விடிய பலத்த மழை: சுருளோட்டில் 56 மி.மீ பதிவானது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்த நிலையில் அதிகபட்சமாக சுருளோட்டில் 56 மி.மீ பதிவாகி இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுகிறது. நேற்று நாகர்கோவில், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பாலமோர், பூதப்பாண்டி, திற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் காணப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. காலையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளி மாணவ மாணவியர், அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மாணவ மாணவியர் குடைபிடித்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சுருளோட்டில் 56 மி.மீ மழை பெய்திருந்தது. கன்னிமார் 22.6, கொட்டாரம் 19, மயிலாடி 8.2, நாகர்கோவில் 25.2, ஆரல்வாய்மொழி 15.2, பூதப்பாண்டி 25.2, முக்கடல் 14, பாலமோர் 45.4, தக்கலை 14, குளச்சல் 14, இரணியல் 4.2, அடையாமடை 28.1, குருந்தன்கோடு 18.6, கோழிப்போர்விளை 5.8, மாம்பழத்துறையாறு 30, சிற்றார்-1ல் 14.8, சிற்றார்-2ல் 19.2, களியல் 15.4, குழித்துறை 12.6, பேச்சிப்பாறை 26.6, பெருஞ்சாணி 22.6, புத்தன் அணை 20.4, ஆனைக்கிடங்கு 29.6, திற்பரப்பு 17.8, முள்ளங்கினாவிளை 28.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.53 அடியாகும். அணைக்கு 1076 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

432 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.12 அடியாகும். அணைக்கு 790 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 460 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.53 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிறறார்-2ல் 14.63 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 47.98 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.5 அடியாகும். குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2.4 மீட்டர் முதல் 2.6 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த நிலை ஜூலை 30 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு