தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து, நாளை ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ம் தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தருமபுரி, தஞ்சையில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை