தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழையானது கொட்டி தீர்த்தது. அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி,காமராஜர் சாலை, அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், நுங்கம்பாக்கத்தில் கனமழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், போரூர், பூந்தமல்லி, மதுரவாயல், மாதவரம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணித்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு