முறையான திட்டமிடுதல் இல்லாததால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

 

ஊட்டி, ஏப்.24: கோடை சீசன் துவங்கிய நிலையில் சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயிலில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும், விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதற்கேற்ப ஊட்டியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து குளு குளு காலநிலை நிலவி வருகிறது.  சீசன் சமயங்களில் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு கோடை சீசன் துவங்கி 20 நாட்களுக்கும் மேலாகிய நிலையில் ஊட்டி நகரில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து செய்வது குறித்து மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ஊட்டி வரை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்யாதப்படாததால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஊட்டியின் கோடை சீசன் வரலாற்றில் இதுபோன்ற மோசமான போக்குவரத்து நெரிசலை பார்த்தது இல்லை. காவல்துறையின் தவறான திட்டமிடலால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மணிகணக்கில் அலைக்கழிக்கப்படுவது வேதனையாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தை கண்டு கொண்டதாக தெரியவில்லை. சுற்றுலா தலங்களை மகிழ்ச்சியோடு பார்க்க வந்தவர்களை ஊட்டி நகரில் திரிய விட்டு வேதனைப்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் கோடை சீசனின்போது சீசன் துவங்குவதற்கு முன்பாக மார்ச் மாத இறுதியிலேயே போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கு காவல்துறையினர் அமைப்பது வழக்கம். ஆனால் இம்முறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து