அனல் பறக்கும்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22ம் தேதி முடிந்த பிறகு நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது வேண்டும் என்றாலும் அறிவிக்கப்படலாம். தேர்தலுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்து விட்டது. 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. ஏப்.11 தொடங்கி மே 19 வரை நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இந்த தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டன.

ராமர் கோயில் திறப்பு விழா பயனை பா.ஜ அறுவடை செய்ய வசதியாக, இந்த முறை வடமாநிலங்களில் முதலில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதற்கு ஏற்றார்போல் சிபிஎஸ்இ தேர்வுகள் ஏப்.2ம் தேதி முடிக்கப்பட உள்ளன. 543 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களுக்கு வேட்பாளர் பெயரைக்கூட பா.ஜ இறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த முறை மோடி அரசை வீழ்த்த நாட்டில் உள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்து உள்ளன.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சியால் காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் எதிர்த்து நிற்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மியும் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளன. அதைவிட முக்கியமாக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில ஆட்சி அதிகாரத்தை ஆம்ஆத்மி கைப்பற்றியது.

அங்கும் கூட்டணி வைக்க இருகட்சிகளின் மாநில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எல்லாம் மீறி பா.ஜவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2014, 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ வென்றது. இந்த முறை காங்கிரஸ், ஆம்ஆத்மி இணைந்து போட்டியிடுவதால் அங்கு பா.ஜவுக்கு சிக்கல் ஏற்படும். அதே போல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரசுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ஆம்ஆத்மி சம்மதித்து விட்டது.

அதே சமயம் அரியானா, கோவா, குஜராத் மாநிலங்களிலும் ஆம்ஆத்மிக்கு தொகுதி ஒதுக்க காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் இருகட்சிகள் இடையே முழுமையான தொகுதி பங்கீடு முடிந்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டும் தான் இழுபறி நீடிக்கிறது. பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த மாத இறுதிக்குள் இந்தியா கூட்டணி மற்ற அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்க உள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் அனல் பறக்கும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு