சூடு பிடிக்கிறது பிரசாரம்

2024 நாடாளுமன்ற தேர்தல் மொத்தமாக 7 கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கிறது. 2ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் 89 மக்களவை தொகுதிகள் என படிப்படியாக 7 கட்டங்களாக நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்கியது. வேட்பு மனுதாக்கல் நாளையுடன் (27ம் தேதி) முடிகிறது. வேட்பு மனுபரிசீலனை நாளை மறுநாள் (மார்ச் 28). வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதி. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் மும்முனை போட்டி உறுதியாகிவிட்டது.

ஆளுநருக்கான கூடுதல் அதிகாரம் ரத்து, உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாகக் குறைக்கப்படும் என மக்களை பாதிக்கும் அம்சங்களை நிவர்த்தி செய்யும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை உள்ளது.

நெடுஞ்சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு தனி பாதை என்பதை தவிர்த்து திமுக தேர்தல் அறிக்கையையே காப்பி அடித்தாற்போல் அதிமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவற்றில் ஒற்றுமை இருந்தது. மோடிக்கு தோல்வி பயம் அவரது முகத்திலும், கண்களிலும் தெரிகிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக மோடி என்ன செய்தார் என கேட்டால், இதுவரை மோடியிடம் பதில் இல்லை. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்பட மக்கள் நலம் சார்ந்த நூற்றுக்கணக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக திருச்சி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பேசினார்.

தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் மோடி, என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். இதுபோன்று திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. பாஜ தலைமையிலான கூட்டணி கட்சியினரும் தேர்தல் தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டு மக்களை சந்திக்க துவங்கி விட்டனர். திமுக, அதிமுக, பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று பவுர்ணமி என்பதால் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியானதும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விடும்.

ஆனாலும் இப்போதே கிளை, வார்டு வாரியாக ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட துவங்கி விட்டனர். தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இனி தீவிரமாகும். இந்த தேர்தலில் சுவர் விளம்பரம் என்பது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு காரணம் தேர்தல் நாட்கள் குறைவு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு தாமதம் ஆகும். ஒலி பெருக்கி பிரசாரம், வீடு வீடாக மக்களை சந்தித்து நோட்டீஸ் வழங்கி களப்பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மொத்தத்தில் இனி ஒவ்வொரு நாளும் அனல் பறக்கும் பிரசாரம் தீவிரமாகும்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு