மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: ஆந்திராவில் 11 வயது சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை


ரேணிகுண்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராவி வலசை கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய ராஜேஸ்வர ராவ், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதற்கிடையே தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி லகரி, இதய பாதிப்பு காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தனர். எனவே சிறுமியின் பெற்றோர், ஆந்திர அரசின் ஜீவதானம் திட்டத்தின் மூலம் இதயத்திற்காக மகளின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் மூளை சாவு அடைந்த ராஜேஸ்வராவ் இதயத்தை சிறுமி லகரிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து ராஜேஸ்வர்ராவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அந்த இதயம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் இதயநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, சிறுமி லகரிக்கு வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். கடந்த ஓராண்டு காலத்தில் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் 10 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!