கூட்டணிக்கு கட்சியை இழுக்க ஆளாய் பறக்கும் தாமரை பார்ட்டியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அட்ரஸே இல்லாத ஆட்களை இழுப்பதில் ஆர்வம் காட்டி வர்றாங்களாமே தாமரை ஆட்கள்..’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘மக்களுக்கு நல்லது செய்வதை எப்போதுமே யோசித்து பார்க்காத தாமரைக்கட்சி நிர்வாகிகள், இலைக்கட்சியில் அதிகம் கவனிக்கப்படாமல் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்து வருகின்றனர். மாஜி அமைச்சர், மாஜி எம்எல்ஏ என கூறுபவர்களில் பலரை இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே யாரென்று தெரிவதில்லையாம். கட்சிக்கு பலனிக்காதவர்களை தேடிப்பிடித்து சேர்த்து என்ன பயன்? அவர்களுக்குத்தான் அதனால் பயன் என பலரும் கூறி வருகின்றனர். இருந்தாலும் இவ்வாறு ஆட்களை கூட்டி வந்து சேர்த்தால், அவர்கள் வகித்த பதவி அடிப்படையில் கணிசமாக பணம் தரப்படுவதால், பலரும் இந்த ஆள் இணைப்பில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் பூட்டு மாவட்டத்தில் தூர் என முடிகிற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மூன்றெழுத்துக்காரர், இலைக்கட்சி நிறுவனர் காலத்தில் இருந்தே கட்சியி்ல் இருந்து வருகிறார். ஆனாலும், கட்சி நிகழ்வுகள் எதிலுமே பங்கேற்பதில்லையாம். உள்ளூர்காரர்கள் பலருக்கே இவர் இலைக்கட்சிக்காரர் என்று அவ்வளவாக தெரியாதாம்… இவரை இழுப்பதற்கு, பூட்டு மாவட்ட தாமரைக்கட்சி நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அவரே வேண்டாமென்று பின்வாங்கினாலும் விடுவதில்லை. யாராவது அவரைப் போய் பார்த்தபடியே உள்ளனர். கட்சிக்கே தெரியாத ஒருவரை சேர்த்து, இலைக்கட்சியில் இருந்து மாஜி எம்எல்ஏவை இழுத்துட்டோம் என பெருமை பேசி என்ன செய்யப் போறாங்களோ என இலைக்கட்சி நிர்வாகிகள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புகார் கடிதம் வந்தால் உதவியாளர்கள் ஏகப்பட்ட குஷி ஆயிடுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில முதன்மையான கல்வி அலுவலகத்திற்கு அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து புகார்கடிதம் வருகின்றனவாம். இந்த புகார் கடிதங்களை அலுவலகத்தில் உள்ள உதவியாளர்கள் பதிவேட்டில் பதிவு செய்து, முதன்மையான கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், அலுவலகத்திற்கு வரும் புகார் கடிதங்களை பதிவேற்றம் செய்யாமல் பிரச்னைக்குரிய கடிதங்களை எடுத்துவிட்டு சாதாரண புகார்களை மட்டுமே பதிவேட்டில் பதிவேற்றம் செய்கின்றனராம். புகார்கள் மற்றும் பிரச்னைக்குரிய கடிதங்களை படித்து சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்களிடம் இருந்து சில ‘ப’ விட்டமின்களை கறந்து விடுவதாக குற்றச்சாட்டு இருந்து வருது. சில நாட்களுக்கு முன்பு ஜெயில் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் சம்பந்தமா புகார் வந்ததாம். ஆனால் அந்த ஆசிரியரின் கவனிப்பால் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த புகாரில் உண்மையில்லை எனக்கூறி முடித்து விட்டார்களாம்.
இதேபோல், பல புகார் கடிதத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட ப விட்டமின் கறந்து விடுகின்றனராம். இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கணும்னு கல்வித்துறை வட்டாரத்தில ேகாரிக்கை எழுந்திருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை தூதரை தவிர்த்திடுச்சாமே சேலத்து கனி கட்சி..’’ ‘‘நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தாமரைக்கட்சி அனுப்பிய தூதை தைலாபுரம் தோட்டம் தவிர்த்திருக்கிறதாம்.
மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து சேலத்து கனி கட்சியின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே இலைகட்சி தரப்பில் சிவி. சண்முகம் எம்பி தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பாக இல்லை என்று, தைலாபுரம் தோட்டம் திட்டவட்டமாக தெரிவிக்க பாஜவுடன் கூட்டணி என்று பேசப்பட்டு வந்ததாம். புதிய நீதி கட்சி ஏசி சண்முகத்தை தாமரைக்கட்சி தூது அனுப்பி தைலாபுரம் தோட்ட சந்திப்புக்கு நேரம் கேட்கப்பட்டு, அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில் சட்டசபை கூட்டதொடர் முடிந்த நிலையில் சேலத்து கனி கட்சி எம்எல்ஏக்கள், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து பேசி இருக்கிறார்களாம். இந்த சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரம் என்று கூறப்பட்ட நிலையில், பாஜ அனுப்பிய தூதரை திடீரென தவிர்த்து இருக்கிறார்களாம்.

நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நடக்க வேண்டிய சந்திப்பு இரு தரப்பிலும் தவிர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறதாம். எப்படியும் மோடி தமிழகத்திற்கு வருவதற்குள் தாமரை கட்சிக்குள் பழத்தை கொண்டு வருவதற்கு எல்லா வேலைகளும் நடக்கிறதாம். இன்று தைலாபுரம் தோட்டம் அருகே நடக்கும் பாஜ கூட்டத்திற்கு வரும் அண்ணாமலை, தோட்டத்து பக்கம் விசிட் அடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி மினிஸ்டரு பொதுநலம்ன்ற போர்வையில சுயநல வேலை பார்க்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முட்டை மாவட்டத்தின் காவிரி கரையோர பகுதிகளில் சாயப்பட்டறை பிரச்னை என்பது பெரிய பிரச்னையாக இருக்காம். அதனால் அங்கு அரசே சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டு வரணும்ன்னு மாஜி மினிஸ்டரு அசெம்பிளியில் வலியுறுத்தினராம். நல்ல கோரிக்கை தான். ஆனால் பப்ளிக்கிடமிருந்து அவருக்கு வந்த ரியாக்‌ஷன் வேறமாதிரி இருந்துச்சாம். மாஜியின் சொந்த ஊரில் அதிகளவில் சாயப்பட்டறைகள் இருக்கு. அதிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பது என்பது பலஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னையாம். இதுக்கு தீர்வு காண, பத்துவருஷம் மினிஸ்டரா இருந்தவரு எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். இப்போது அரசே சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கணுன்னு சொல்றாரு. அதைக்கூட ஏத்துக்கலாம். இங்கு மாஜிக்கு சொந்தமான மெகா சாயப்பட்டறை, அவரது உறவினர்களுக்கு சொந்தமான சாயப்பட்டறை, ஆதரவாளர்களுக்கு சொந்தமான சாயப்பட்டறைகள்தான் இருக்கு. அதுக்கெல்லாம் சேர்த்துதான் அரசு சார்பில் அண்ணன் சுத்திகரிப்பு நிலையம் கேக்குறாரு. பொதுநலத்திலும் சுயநலம் என்பதுதான் அவரோட ஸ்பெஷலே என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாரிக்கிட்டே இருக்காங்களாம் உள்ளூரில் சில அமைப்புகளின் நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை