Wednesday, September 25, 2024
Home » அவர் ரொம்பவே ஜாலியான பெர்சன்!

அவர் ரொம்பவே ஜாலியான பெர்சன்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

திவ்யா மாரிசெல்வராஜ்

“என் ஆன் மாவின் தைரியமாக மட்டுமில்லாமல் அது கோரும் சுதந்திரமாகவும் இருக்கும் என் திவ்யாவுக்கு…” என இயக்குநர் மாரி செல்வராஜ் தன் இணையரான திவ்யா குறித்து எழுத…
திவ்யாவோ, “மாரியின் வலியும் வாழ்வும்தான் வாழை” எனப் பதிவிட… இவர்களின் காதல் கெமிஸ்ட்ரி கதை கேட்டு அவர்களது வீட்டுக் கதவை நாம் தட்ட…
புன்னகையோடு நம்மை வரவேற்றார் ‘வாழை’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான திவ்யா மாரிசெல்வராஜ்.

ராஜா கதைக்கு முன்பு ராணி கதையை சொல்லுங்கள்..?

எனக்கு ஊர் சேலம். என் அம்மா அரசுப் பள்ளி ஒன்றில் தமிழாசிரியர். அம்மாவிடம் வாசிப்பு பழக்கம் இருந்ததால், என் வீடு புத்தகங்களால் நிறைந்திருந்தது. சம்பளம் வாங்கியதும் அம்மா செய்கிற முதல் செலவு புத்தகங்களை வாங்குவதாகத்தான் இருக்கும். அம்மாவைப் பார்த்தே நானும் வாசிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் மீதான ஈர்ப்பால், பல முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள், அவர்களின் எழுத்து நடைகளை ஆர்குட்டில் பதிவுகளாக்கி வெளியிட ஆரம்பித்தேன்.

சிறுகதைகள், நாவல்கள், திரைப்படம் குறித்த விவாதங்கள் என என் வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாக நகர்ந்தது. வாசிப்புத்தளம் கொஞ்சம் கொஞ்சமாக பெரியாரின் சிந்தனைக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, அங்கே முற்போக்கு சிந்தனையாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவர்கள் மூலமாக ‘காட்சி’ தளம் அறிமுகமாக, அதில் இருந்த
பல்வேறு முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதில் மாரிசெல்வம் என்கிற பெயரும் இருந்தது.

‘அலைந்து திரியும் பெருங்கடல்…’ ‘மகாத்மாவை நான்தான் கொன்றேன்…’ ‘தட்டாம்பூச்சிகளின் வீடு…’ என்கிற தலைப்புகளில் இருந்த அவரின் மூன்று கதைகளும் மூன்று ஜானரில் என்னை தொந்தரவு செய்ய, மாரி செல்வம் யாரென ஆர்குட்டில் தேட ஆரம்பித்தேன்.மாரிசெல்வம் வயசானவரா? இளைஞரா? எதுவும் எனக்கு அப்போது தெரியாது. ஒரு வாசகியாக சாட்டிங் வழியே அவருடன் அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கிறோம். கமென்ட் பகுதியில் என் கருத்துக்களை அவருக்குப் பதிவிட்டு வந்ததை நிறுத்திவிட்டு, ஆர்குட் காலரில் பேசுகிற அளவுக்கு நட்பு நெருக்கமானது. அவர் படிக்கும் புத்தகங்கள்… நான் வாசிக்கிற புத்தகம்… அவர் பார்க்கும் சினிமா… முக்கியமான எழுத்தாளர்களின் மேடைப் பேச்சு என எங்கள் உரையாடல் தொடர்ந்தது. வண்ணதாசனின் கவிதைகள் குறித்து நிறைய பேசுவோம். ஒருகட்டத்தில் இந்த நெருக்கம் காதலாக, இருவரும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமலே நட்பைத் தொடர்ந்தோம். உங்களின் முதல் சந்திப்பு..?

அது ரொம்பவே ஆச்சரியமானது. முதல் எட்டு மாதம் சாட் வழியாகவே பேசிக் கொண்டிருந்த நிலையில், “இயக்குநர் ராம் சாரோடு கோவை போகிற வேலையிருக்கு. வழியில் சேலம் ரயில் நிலையத்தில் ஒருசில நிமிடங்கள் ரயில் நிற்கும். அந்த இடைவெளியில் சந்திப்போமா” எனக் கேட்கிறார்.எனக்கான நபரை முதன் முதலில் நான் பார்க்கப் போகிறேன் என்கிற பதட்டம் அப்போதே என்னை தொற்றிக் கொண்டது.

பார்க்காமலே மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தவர்கள், பார்த்ததும் என்ன பேசுவதெனத் தெரியாமல் பரிதவிப்பும் பதட்டமுமாக… வார்த்தைகளற்று உறைந்து… தடுமாறி நிற்க… மீண்டும் அந்த ரயில் பயணம் அவரை என்னிடத்தில் இருந்து தூரத்தில் கோடாக, புள்ளியாக பிரித்தது.“ஒரு தேவதையின் முகச் சாயலோடு தவிச்சிக்கிடக்கும் திவ்யாவிற்கு என் வாழ்வின் மிச்சமிருக்கும் அத்தனை நன்றிகளும்” என்ற இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளைப்போல, திவ்யாவின் கண்களில் அந்த நாளின் வெட்கமும் ஏக்கமும் இப்போதும் எட்டிப் பார்க்கிறது.

உங்கள் திருமணம்..?

2010ல் தொடங்கிய எங்கள் நட்பு 2016ல் திருமணத்தில் முடிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், அவரின் பால்யத்தில் தொடங்கி எல்லாக் கதைகளையும் அதற்குப் பின்னிருக்கும் வலிகளையும் என்னிடம் பேசியிருக்கிறார். அவரின் பகிர்தலில் பசியை மறக்க அவர் தூங்கிய கதைகள் அதிகம் இருந்தது. கூடவே வாழை சுமந்த கதைகளும்.தன் வாழ்வில் யாரெல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்திருக்கிறார்கள்… யாரெல்லாம் தவிர்க்க முடியாத நபர்கள்… யாரெல்லாம் தன் மீது சிலுவையை தூக்கி வைத்திருக்கிறார்கள் என எல்லா மனிதர்களைப் பற்றியும் என்னிடத்தில் பகிர்ந்து, அவருடைய உளவியல் என்ன..? அவரின் மனநிலை என்ன..? என்கிற புரிதலுக்கு உட்படுத்தினார். வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே அவரைப் பற்றிய விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லி மனதளவில் என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தார். அதனால்தான் எங்கள் வாழ்க்கையில் பெரிய அளவுக்கு வாக்குவாதங்கள் இதுவரை வந்ததில்லை.

நாங்கள் காதலித்த காலத்தில் ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொண்டு அவர் ஏறி இறங்காத கம்பெனி இல்லை. இந்த இடைவெளியில் நான் பி.எட்.முடித்து, டெட் எக்ஸாமும் தேர்வாகி அரசுப் பள்ளி ஆசிரியராய் வேலையில் இருந்தேன். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் நான் ஆங்கில ஆசிரியர். அரசு வேலை என் கையில் இருந்ததால் தைரியமாக திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்தோம். இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு எங்கள் திருமணம் எனது ஊரான சேலத்தில் நடந்தது.எனது கணவர் மாரிசெல்வராஜ் சீரியஸான நபர் இல்லை. ரொம்பவே ஜாலியான பெர்சன். வீட்டுக்குள் வரும்போது ஜாலியாக வருவார். இளையராஜா பாடல்கள், சார்லி சாப்ளின், வடிவேலு காமெடிகளை எப்போதும் ரசித்துப் பார்ப்பார்.

‘வாழை’ படத்தின் உண்மை சம்பவம் குறித்து..?

மாரியின் வாழ்வில் நடந்த ஆறாத தழும்பு அவர் அக்காவின் மரணம். படத்தில் காட்டியிருப்பதுபோல, அக்காவோடு வாழை சுமக்கச் செல்வது… ஆற்றுக்கு குளிக்கச் செல்வது… தம்பிக்காக அக்கா எதையாவது சாப்பிட செய்து கொடுப்பதென… இறந்துவிட்ட அக்காவுடன் மாரிக்கு பாசமும், நெருக்கமும் அதிகம்.விபத்து நடந்த அன்று அக்காவின் அனுமதியோடுதான் காய் சுமக்காமல், பள்ளி நடனப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வாழைப்பழத்தை சாப்பிட்டதற்காக அடிவாங்கி, முட்டிபோட்டுவிட்டு, ஊருக்குள் நுழைந்தபோது… மாரிக்கு பிடித்த அக்காவின் மரணம் அங்கே நடந்திருந்தது. பள்ளிக்குச் சென்றதால் மாரி அன்று பிழைத்தார்.

அந்த விபத்தில் இறந்தவர்கள் 19 பேர். ஆனால் பத்திரிகை செய்திகளில் 20 என பதிவாகி இருந்தது. அந்த இருபதாவது நபர் வாழைக் காட்டுக்கு போகாமல் டைப்ரைட்டிங் தேர்வுக்கு அதிகாலையில் சென்றுவிட்ட மாரியின் பெரிய அக்காதான்.அந்த விபத்தில் இறந்தவர்கள் எல்லாமே ஒரே தெருவில், மாரியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்த அவரது உறவினர்கள். ஒவ்வொரு வீட்டிலும் அன்று இறப்பு இருந்தது. சேகராக நடித்து இறந்தது அவரின் சித்தப்பா மகன். பெயர்கள் மட்டுமே படத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அந்த விபத்தை படமாக்கிய போது இயக்குநரின் மனநிலை..?

குறிப்பிட்ட காட்சியை படமாக்கப் போகிறார் என்றதுமே, குழந்தைகளுடன் திருநெல்வேலி கிளம்பிப் போனேன். இரவில்தான் அந்தக் காட்சியினை எடுத்துக்கொண்டு இருந்தார்கள். தன்னை ரொம்பவே அமைதியான மனநிலைக்குள் அவர் வைத்திருந்தார். தொந்தரவு செய்யாமல் தூரத்தில் அமைதியாக இருந்து, அவரின் மனநிலையை சற்று நேரம் உள்வாங்கினேன். என் இருப்பு அவரை கூடுதலாய் தொந்தரவு செய்யும் எனத் தோன்றியதுமே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் அவர் யாரையுமே சந்திக்கவில்லை.

படத்தை முதலில் பார்த்தபோது உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது..?

மாரியை ரொம்பவும் நேசிக்கும் பெண்ணாக அவர் இந்த விபத்தை முதலில் சொன்னபோது நான் கல்லூரி மாணவி. 14 வருடத்திற்கு முன்பு என்னிடத்தில் சொன்ன கதையினை… அந்த வலி குறையாமல் காட்சியிலும் அப்படியே கொண்டு வந்து காட்டுகிற அளவுக்கு மாரியின் வலி இப்பவும் இருக்கா? அவ்வளவு உன்னை வருத்திக்கிட்டு நீ இப்பவும் இருந்தியா? என
ஆச்சரியமாக இருந்தது. நடந்த சம்பவங்கள் வலியை கொடுக்கக் கொடுக்கத்தான் மாரியின் எழுத்து இன்னும் வீரியமடைகிறது என நான் நம்புகிறேன்.

ஒப்பாரி வச்சு நம்முடைய சோகங்களை நாம் எப்படித் தீர்த்துக் கொள்கிறோமோ அதுபோலத்தான் மாரி அவரின் வலிகளை தன்னுடைய பதிவுகளின் வழியாக வெளிப்படுத்தி தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார். ‘வாழை’ படத்திற்கான ஸ்கிரிப்டை மாரி எழுதும்போது தூங்காமலே இருந்தார். அக்காவின் மரணம் தந்த பாதிப்பில், மாரியின் அப்பாவிற்கு நடந்த விஷயங்களைதான், ‘கர்ணன்’ படத்திலும் சில இடங்களில் காட்சிகளாக்கி இருந்தார்.

இயக்குநரின் குடும்பம் ‘வாழை’படத்தை பார்த்தார்களா?

அக்கான்னு ஒருத்தரை அகன்ற திரையில் காண்பித்து, அவர் மரணத்தையும் காட்டும்போது அம்மாவும் அப்பாவும் தாங்கிக்கொள்வார்களா!? என்பதே மாரியின் எண்ணமாக இருந்தது. நடந்த சம்பவத்தை திரையில் பார்த்து, பட்டுன்னு இருவரும் உடைஞ்சுடக்கூடாதென, படம் வெளியாவதற்கு முன்பே அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். படம் நல்லா வந்துருக்கு என எல்லோரும் பேசப்பேச “நாங்க அழமாட்டோம் மாரி, எங்களையும் படம் பார்க்க கூட்டீட்டுப்போ” என இருவரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதுவரை இருவரையும் படம் பார்க்க அவர் விடவில்லை.ஆனால் மாரியின் பெரிய அக்காவோடுதான் ராகிணி தியேட்டரில் நான் ‘வாழை’ படத்தைப் பார்த்தேன். தங்கச்சி பாத்திரத்தில் நடிகை திவ்யா துரைசாமியை பார்த்ததுமே, அக்கா கண் கலங்கி அழுதார். காரணம், திவ்யா துரைசாமியின் முகத்தில் இறந்த அக்காவின் சாயல் லேசாக இருக்கிறது.  படம் முழுதுமே தங்கச்சியின் நினைவுகளில் அக்கா ரொம்பவே தவித்துப் போனார். என் கைகளை இறுகப் பிடித்து அழுதார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi