ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சாமியார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறாததால், அவரை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள், ஒருவர் ஆண், மற்ற அனைவரும் பெண்கள். காயமடைந்தவர்கள் ஹத்ராஸ், எட்டா உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்திருப்பதாக நிவாரண இயக்குனர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதி செய்துள்ளனர். இதில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்படவில்லை. 28 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 (கொலை அல்லாத மனிதக்கொலைகள்), 110 (மனிதக் கொலைகளுக்கு வழிவகுத்தல்), 126 (2) (தவறான கட்டுப்பாடு), 223 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்), 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 80,000 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2.5 லட்சம் பேர் கூடியதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் உண்மையான எண்ணிக்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறைத்ததாகவும், போக்குவரத்து வசதிகளுக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், விபரீதத்திற்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்த பக்தர்களின் செருப்பு உள்ளிட்ட உடைமைகளின் குவியல்களை பக்கத்து வயல்வெளிகளில் தூக்கி போட்டு ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார், மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த தவறும் இல்லை எனவும் முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறே விபரீதத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலே பாபா என்று அழைக்கப்படும் பாபா நாராயண் ஹரி தலைமறைவாகி விட்டார். பிச்சுவானில் உள்ள அவரது ஆசிரமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளே செய்தியாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் ஆசிரமத்திற்குள் தான் பாபா நேற்று இருந்ததாக சில போலீசார் கூறி உள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். அதே சமயம், போலீஸ் எப்ஐஆரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் பாபாவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் போலே பாபாவை தப்ப வைக்க உபி போலீஸ் முயற்சிப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

பலியானவர்களின் சடலங்கள் ஹத்ராஸ் மற்றும் எட்டா உள்ளிட்ட மருத்துவமனைகளில் குவிந்துள்ளன. அவற்றை விரைவாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் தரப்பட்டு வருகிறது. எட்டா மருத்துவமனையில் 4 மடங்கு அதிகமாக பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து மக்களின் அழுகுரல்கள் கேட்டபடி இருக்கின்றன. மேலும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள சடலங்களுக்கு மத்தியில் தங்கள் உறவினர்களை அடையாளம் காண முடியாமலும் பலர் தவித்து வருகின்றனர்.

குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்
பலியானவர்களில் 6 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் அரியானா, மற்றும் மபி, ராஜஸ்தானை சேர்ந்த தலா ஒருவர் என அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர். இதில் டெல்லியை சேர்ந்த டிரைவர் சத்யேந்திர யாதவ் என்பவரின் 3 வயது மகன், ராஜஸ்தானின் ஆயுஷ் என்கிற 9 வயது சிறுவன் உள்ளிட்ட குழந்தைகளை இழந்த அவர்களின் குடும்பத்தினர் பெரிதும் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். சாமியாரின் சொற்பொழிவில் பங்கேற்ற 90 சதவீதம் பேர் ஏழை அடித்தட்டு மக்கள்.

சாமியார் கார் டயர் மண்ணை எடுக்க முண்டியடித்த பக்தர்கள்
பிற்பகல் 3 மணி அளவில் சொற்பொழிவை முடித்துக் கொண்டு சாமியார் போலே பாபா காரில் புறப்பட்டுள்ளார். அப்போது பெரிய மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாபாவின் கார் டயர் மண்ணை எடுக்க முண்டியடித்துள்ளனர். இதில் அங்கிருந்த சேற்றில் பலர் வழுக்கி கீழே விழ அவர்களை பலரும் ஏறி மிதித்துள்ளனர். அதோடு பாபாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் தடியுடன் கூட்டத்தை தடுத்து நிறுத்தியதால் பலர் கீழே விழுந்து கூட்டத்தில் நசுக்கப்பட்டுள்ளனர். இப்படியாக, பெண்களும், குழந்தைகளும் மிதிபட்டு இறந்துள்ளனர். அழுத்தம் காரணமாக மூச்சுத்திணறல் மரணத்திற்கு முக்கிய காரணம் என டாக்டர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்
உபி ஹத்ராஸ் சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது இரங்கல் செய்தியை நேற்று அனுப்பி உள்ளார். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகமான கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிபர் விளாடிமிர் புதின், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை சப் கலெக்டர் சிக்ந்தரா ராவ், கலெக்டரிடம் சமர்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* சொற்பொழிவு நடந்த விழா பந்தலில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கூடியிருந்தனர்.
* விழா மேடைக்கு போலே பாபா பிற்பகல் 12.30 மணிக்கு வந்துள்ளார்.
* சுமார் 1.40 மணி அளவில் அவர் மேடையை விட்டு வெளியில் வந்து, எட்டா நகருக்கு செல்வதற்காக சிறிது தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 91ஐ நோக்கி நடந்துள்ளார்.
* அந்த சமயத்தில் பக்தர்கள் பாபாவின் காலில் விழுந்து வணங்கி தரிசிக்கவும், அவரது காலடி மண்ணை எடுக்கவும் முண்டியத்துள்ளனர். பலர் காலடி மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டனர்.
* பாபா காரில் ஏறியதை பார்த்ததும், சாலையில் டிவைடருக்கு பின்புறம் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் காலி மைதானத்தை நோக்கி விரைந்தனர்.
* இதைப் பார்த்த பாபாவின் பாதுகாவலர்கள், ஏராளமான மக்கள் வருவதால், அவர்களை தடுத்து நிறுத்தி பின்னால் தள்ளினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டதால் சிலர் தப்பிப்பதற்காக காலி மைதானத்தின் மறுபுறத்திற்கு ஓடினர்.
* காலி மைதானத்தில் சேறும் சகதியும் இருந்ததாலும், சாலையில் இருந்து காலி மைதானத்தை இணைக்கும் பகுதி சரிவாக இருந்ததாலும் பலர் அதில் சறுக்கி விழுந்தனர்.
* சறுக்கி விழுந்தவர்களை பலரும் மிதித்து சென்றதால் எழுந்து கொள்ள முடியவில்லை. மறுபுறம் சேற்றில் வழுக்கி விழுந்தனர். கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த இடமே களேபரமாகி மாறியது. இந்த நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 121 பேர் இறந்துள்ளனர்.

Related posts

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த இலங்கை படகு

கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ்: 6 இளைஞர்கள் கைது

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்