வெறுப்பு பேச்சு

நாடாளுமன்றத்திற்கான முதல்கட்ட தேர்தல் நடந்த 102 தொகுதிகளின் முடிவுகள் ஒன்றிய பாஜ கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது. இதனால் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளை குறிவைத்து பாஜ தனது விஷம பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 முறை வந்து பிரசாரம், ரோடு ஷோ நடத்திய மோடி, தனது 10 ஆண்டு அரசின் சாதனைகளை மக்கள் மன்றத்தில் பேசி ஓட்டு கேட்கவில்லை. மாறாக, நாட்டிற்கே மாடல் அரசாக விளங்கும் மாநில அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வாக்கு சேகரித்தார். சமீபத்தில் கர்நாடகாவில் பேசிய மோடி, வெளிநாடு, உள்நாட்டில் அதிகாரம் படைத்தவர்கள், என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் எனக்கு உள்ளது என பேசி தனது உதறல்களை மறைத்துக் கொண்டார். இதன் உச்சமாக ராஜஸ்தானில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பிரதமர் மோடியின் பீதி நிறைந்த இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

மோடி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, வாக்காளர் கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. சங்பரிவார் அமைப்புகளில் கற்றுக்கொண்டதை மோடி தற்போது செயல்படுத்தியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கை நியாயமானது.இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐயை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை பாஜ கைது செய்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்ததன் மூலம் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு வெளிக்காட்டிய பாஜவின் நிஜமுகம் தற்போது மோடியின் பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில், மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. எங்களின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும், அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியைப் பற்றி பேசுகிறது. மோடியின் சிம்மாசனம் இப்போது அசைந்து கொண்டிருக்கிறது என்ற காங்கிரஸ் தலைவர் கார்கேயின் கூற்று சத்தியமான உண்மை. கடந்த 10 ஆண்டில் ஏழை மக்களுக்கான எந்த திட்டமும் வகுக்காமல் தனது பேச்சை மட்டுமே நம்பி அரசு நடத்திய மோடியின் வாய்ஜாலமே இந்த தேர்தலில் அவர்களின் வீழ்ச்சிக்கான பாதையமைக்கும்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா