ஹாட்ரிக் மாநில வெற்றியால் பா.ஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ஹாட்ரிக் மாநிலங்களில் பா.ஜ வெற்றி பெற்றதால் 2024 மக்களவை தேர்தலிலும் பா.ஜ ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி பேசினார். மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று பிரதமர் மோடி வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜ மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றி தற்சார்பு இந்தியா என்ற எனது அரசின் செயல்திட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஹாட்ரிக் மாநில வெற்றியால் 2024 மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான எங்கள் போருக்கு மக்கள் ஆதரவை இந்த முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் பொதுமக்கள் பாடம் கற்பித்துள்ளனர். அவர்களால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. ஊழலில் ஈடுபட்டுள்ள இந்த கட்சிகளுக்கு வாக்காளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் வளர்ச்சிக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் வர வேண்டாம். அப்படி வந்தால் அவர்களை மக்களே அகற்றுவார்கள்.

2024 மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிக்கு உத்தரவாதம் என்று சிலர் ஏற்கனவே கூறி வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல்களில் எங்கள் கட்சி மாநில அளவில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. வளர்ச்சி வேகமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களை ஆதரிக்க வேண்டாம். இந்த முடிவுகள் இந்தியாவின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உறுதி செய்யும். நாட்டிற்கான உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும். பலமான பெரும்பான்மை மிக்க, நிலையான அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிப்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது.

சுயநல அரசியலையும், தேச நலன் சார்ந்த அரசியலையும் மக்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியும். வலுவான பாஜ நாட்டின் வளர்ச்சிக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் சாதியை வைத்து சிலர் அரசியல் செய்தனர். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு பெரிய சாதிகள் தான் நாட்டில் உள்ளனர். அவர்களின் அதிகாரம் நாட்டின் அதிகாரம் பெற வழிவகுக்கும். உங்கள் கனவு எனது தீர்மானம் என்பதை முழு நேர்மையுடன் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எதிர்மறை சக்திகள் ஒன்றிணைவதற்கு இப்போது கடினமாக உழைக்கும். மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டு நாம் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லோருடைய வாக்குறுதிகளின் நம்பிக்கைகள் முடிவடையும் போது மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

புயல் பணி
பிரதமர் மோடி பேசுகையில்,’தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ தொண்டர்கள் புயலை எதிர்கொள்வதில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக பணியாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா