ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சண்டிகர்: ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஹரியாணாவில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி நடந்த பிற்படுத்தப்பட்டோர் சங்க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக 1950 வாக்கில் காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை வருட கணக்கில் காங்கிரஸ் அமல்படுத்தவில்லை.

இதேபோல் 1980-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது ஓபிசி இடஒதுக்கீடுக்கு எதிராக இரண்டரை மணிநேரம் பேசினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பிறப்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. காங்கிரஸ் கட்சி ஹரியாணாவில் ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்.

இங்கும் பிறப்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும். ஆனால் பாஜக அப்படி செய்யாது. ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஹரியாணாவில் முழு மெஜாரிட்டி உடன் பாஜக ஆட்சியமைக்கும்” என்று பேசினார். ஹரியாணாவில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர்; சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி ஆசை காட்டும் கேகேஆர்: ரோகித் சர்மாவுக்கு ரூ.30 கோடியுடன் அணிகள் காத்திருப்பு

ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை மாணவர்கள் அவசியம் பார்வையிட வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

வேளாங்கண்ணியில் 29ல் கொடியேற்றம்; நாகை, கீழ்வேளூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 28ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்